10 நிமிடத்தில் பாயாசம் எப்படி செய்வது? என்று தானே யோசிக்கிறீங்க. நிஜமாகவே பாயாசத்திற்கு தேவையான அத்தனை பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டால், 10 நிமிடத்தில் இந்த பாயாசத்தை செய்து முடித்துவிடலாம். திடீர் விருந்தாளிகள் வந்தால், திடீரென்று பாயாசம் குடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால், சட்டுனு உங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை தயார் செய்யலாம். சரி, வாங்க ரவை பாயாசத்தை எப்படி செய்வதென்று இப்பவே தெரிஞ்சுக்கலாம்.

இந்த ரவை பாயாசம் செய்ய தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். 3 டேபிள்ஸ்பூன் – நெய், முந்திரிப்பருப்பு – 10 லிருந்து 15, ரவை – 1/4 கப், தண்ணீர் – 1/2 கப், திக்காக காய்ச்சி ஆற வைத்த பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 1/2 கப், குங்குமப்பூ – 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன் (உங்க வீட்ல குங்குமபூ இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம்)
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து முந்திரி பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் மீதம் அப்படியே நெய் இருக்கும் அல்லவா. அந்த நெய்யில் ரவையை கொட்டி இரண்டு நிமிடங்கள் வரை வறுக்கவேண்டும். அடுப்பு கட்டாயம் சிம்மில் தான் இருக்க வேண்டும்.

ரவை இரண்டு நிமிடம் வரை நன்றாக பொன்னிறமாக வறுபட்டதும், 1/2 கப் அளவு தண்ணீரை ரவையில் ஊற்றி கைவிடாமல் கலந்து விடவேண்டும். ரவை வெந்து கட்டி பதத்திற்கு வந்துவிடும். ரவை வெந்தவுடன் அரை லிட்டர் அளவு பாலை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் ஊற்றி, இந்த ரவையை கைபடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் ரவை கட்டி பிடிக்காமல் பாயாசமாக தயாராகும்.
பாலை முழுமையாக கடாயில் ஊற்றியவுடன் இதில் 2 சிட்டிகை குங்குமப் பூவை சேர்த்து, பாலை இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். குங்குமப்பூ இல்லை என்றால், பால் 2 நிமிடம் கொதி வந்தவுடன், எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை இதில் போட்டு, நன்றாக கலந்து விட்டு சர்க்கரை கரையும் வரை மீண்டும் 2 நிமிடம் வரை பாயாசத்தை கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து, ஏலக்காய் தூளை தூவி கமகம வாசத்தோடு சுடச்சுட இந்த பாயசத்தை பரிமாறி பாருங்கள்.

இந்த பாயாசம் எதில் செய்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சூப்பரான ரெசிபி இது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க