மாங்காய் சீசன் முடியறதுக்குள்ள இப்படி ஒரு முறை புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாத்துடுங்க. அட டேஸ்ட் அட்டகாசமா இருக்கே அப்படின்னு நிச்சயமா பீல் பண்ணுவீங்க.

- Advertisement -

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒரு காய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம். அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செய்வோம். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக மாங்காவை வைத்து மாங்காய் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இதை செய்வதற்கு முதலில் ஒரு சிறிய சைஸில் உள்ள மாங்காவை மேல் தோல் நீக்கி விட்டு காய் சீவும் சீவலில் மெலிதாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கப் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அரிசி முக்கால் பாதம் வரை வேகும் வரை விட்டு வடித்து எடுத்து ஆற வைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சாதம் வடிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த புலாவ் எப்படி செய்வது என்று பார்த்து விடலாம் அதற்கு அடுப்பில் ஒரு பேன் வைத்து ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் 2 பிரட் துண்டுகளை ஓரமாக நறுக்கி சின்ன சின்னதாக துண்டுகள் போட்டு அதை இந்த எண்ணெயில் சேர்த்து சிவந்தவுடன் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

மறுபடியும் இதே எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்து சூடானவுடன் 1 பட்டை, 2 கிராம்பு, 1 ஏலக்காய், 1 பிரியாணி இலை, 10 முந்திரி ஒரு அண்ணாச்சி பூ சேர்த்து பொரிந்த உடன் நான்கு பல் பூண்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வெங்காயம் சிவந்து வதங்க வேண்டிய அவசியம் கிடையாது.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் மாற்றி வைத்து விட்டு 1ஸ்பூன் மிளகாய்த் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து லேசாக வதங்கிய பிறகு ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்த்து அதையும் நன்றாக வதக்கி விடுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு வரை நாம் ஏற்கனவே வடித்து ஆற வைத்த சாதம், பொரித்து வைத்த பிரட் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.அடுப்பை லோ ஃபிலிமிலேயே வைத்து இந்த சாதத்தில் மசாலா ஊறும் வரை விட்டு இரண்டு நிமிடம் மட்டும் அரிசி உடையாமல் கலந்து விட்டால் அருமையான மாங்காய் புலாவ் ரெடி.

இதையும் படிக்கலாமே: வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காம காய்கறி சாம்பார் இப்படி அரைச்சி ஊத்தி வச்சீங்கன்னா, நீங்க வைக்கிற சாம்பாரோட மணம் பக்கத்து தெரு வரைக்கும் வீசும்.

மாங்காயில் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் இனிப்பு, காரம் புளிப்பு என அனைத்தும் சேர்ந்து சூப்பரா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -