வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காம காய்கறி சாம்பார் இப்படி அரைச்சி ஊத்தி வச்சீங்கன்னா, நீங்க வைக்கிற சாம்பாரோட மணம் பக்கத்து தெரு வரைக்கும் வீசும்.

- Advertisement -

நம்முடைய உணவு கலாச்சாரத்தில் குழம்பு என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது சாம்பார் தான். எந்த விசேஷமாக இருந்தாலும் சரி சாப்பாடு சாம்பார் இது தான் முதலில் இருக்கும். அதே நேரத்தில் இது பெரும்பாலானோருக்கு பிடித்த உணவாகவும் இருக்கும். இந்த சாம்பாரை பல வகையில் வைக்கலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் வெங்காயம் தக்காளி எதையும் சேர்க்காமல் மசாலா அரைத்து சாம்பார் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முதலில் 100 கிராம் துவரம் பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு குக்கரில் சேர்த்து 1/2 ஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த சாம்பாருக்கு ஒரு மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்2 ஸ்பூன் கடலைப் பருப்பு,1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 ஸ்பூன் மல்லி விதை, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 5 காய்ந்த மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இவையெல்லாம் தனியாக எடுத்து தட்டில் கொட்டி ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஃபைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 ஸ்பூன் கடுகு, 2 காய்ந்த மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரித்தவுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் வரும் வரை நறுக்கி எடுத்து அதையும் எண்ணெயில் சேர்த்து நன்றாக ஒரு முறை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது காய்கறி வேக 1/2 கப் தண்ணீர் ஊற்றி 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள். காய்கறிகள் பாதி அளவு வெந்த பிறகு பருப்பை நன்றாக கடைந்து இந்த காய்கறியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அரைத்த விழுதையும் இதில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை கொதிக்க விடுங்கள்.

இப்போது எலுமிச்சை பழ அளவு புளி எடுத்து ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் இந்த சாம்பார் கொதித்த பிறகு கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி 1/4 டீஸ்பூன் பெருங்காயமும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இதுவும் ஒரு ஐந்து நிமிடம் கொதித்த பிறகு 1/2 டீஸ்பூன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கடைசியாக ஒரு கொத்து கொத்தமல்லியை தூவி இறக்கி விட்டால் கமகமவென்று மணக்கும் சாம்பார் தயார்.

இதையும் படிக்கலாமே: ரெண்டு நாளைக்கு குழம்பு வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. அதுவும் தக்காளி போடாமல் இந்த குழம்பு ரெசிபி கிடைத்தது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் போங்க.

வெங்காயம் தக்காளி எதையும் சேர்க்காமல் சுலபமாக வைக்கும் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ஒரு முறை செய்து பாருங்கள்.

- Advertisement -