நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறக்கூடாது, சரிவுகளை மட்டுமே சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களை தான் எதிரிகள் என்று கூறுவோம். இந்த எதிரிகள் நம் கண்ணுக்கு நன்றாக தெரிந்த எதிரிகளாகவும் இருக்கலாம். தெரியாத துரோகிகளாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்கள் நம்மை வாழ விடாமல் கஷ்டப்படுத்தும் பொழுது அவர்களின் தொல்லை நமக்கு முற்றிலும் நீங்க வேண்டும் என்றும் நம்மை விட்டு அவர்கள் விலகினாலே போதும் என்று தான் நினைப்போம். அப்படி நம்மை வாழ விடாமல் முன்னேற்றத்தை தடை செய்யக்கூடிய எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மை விட்டு விலகுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழிலிலோ, படிப்பிலோ, வேலையிலோ அல்லது உறவினர்கள் மூலமாகவோ நண்பர்களாக இருப்பவர்கள் கூட நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமை பட்டாலோ அல்லது நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்து அவர்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலோ அதனால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். அந்த பிரச்சினைகளில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று முயற்சியும் செய்வோம். ஒரு சிலர் இதையும் தாண்டி வாழ்க்கையே இழக்க வேண்டும் என்பதற்காக தீய சக்திகளின் ஆதரவை தேடுவார்கள். இப்படி எந்த ரூபத்தில் நமக்கு கெடுதல் நினைத்தாலும் அந்த கெடுதலை சரி செய்வதற்குரிய பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் இரவு 10 மணியிலிருந்து 12:00 மணிக்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கடுகு மற்றும் ஒரு வெள்ளை நிற துணி. ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடுகை அதில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்றால் நாம் வணங்க வேண்டிய தெய்வம் கால பைரவர் மற்றும் வாராகி அம்மன். அதனால் இந்த கடுகு மூட்டையை கையில் வைத்துக்கொண்டு முதலில் குலதெய்வத்தையும் பிறகு நம்முடைய இஷ்ட தெய்வத்தையும் அதற்கு பிறகு கால பைரவரையும், வாராகி அம்மனையும் முழுமனதோடு வழிபாடு செய்து நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகள் அனைவரும் விலக வேண்டும், அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் மூன்று நான்கு துண்டு கற்பூரத்தை போட்டு அந்த கற்பூரத்தை ஏற்றுங்கள். கற்பூரம் எரியும் பொழுது இந்த மூட்டையை அந்த கற்பூரத்தில் வைக்க வேண்டும். கற்பூரத்தோடு சேர்ந்து இந்த மூட்டையும் எரியும். அதேசமயம் அதற்குள் இருக்கக்கூடிய கடுகும் வெடிக்கும். இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் தொடர்ச்சியாக செய்யும்பொழுது எதிரிகளின் தொல்லையில் இருந்து நம்மால் விடுபட முடியும். அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆனி கடைசி ஞாயிறு ரகசிய பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த கடுகு பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிரிகளையும் விலக்கிவிடும். முழு நம்பிக்கையோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.