அட! இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அப்போ உடனே ஹோட்டல் சுவையில் மிகவும் அட்டகாசமாக இருக்கும் இந்த வெள்ளை குருமாவை செய்து கொடுங்கள்

white-kuruma
- Advertisement -

இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம். அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அவ்வாறு நமது வீட்டிலும் இந்த வெள்ளை குருமாவை ஹோட்டலில் செய்யப்படும் அதே சுவையில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 5, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 7, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், கேரட் – 1, பட்டாணி – 25 கிராம், காலிஃப்ளவர் – சிறிதளவு, தேங்காய் – அரை மூடி, பீன்ஸ் – 10, முந்திரி – 10, கசகசா – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பிறகு கேரட், பீன்ஸ் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக காலிஃபிளவர் மற்றும் பச்சைப்பட்டாணியை சுத்தமாக தண்ணீரில் அலசி வைக்க வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் கசகசா மற்றும் 10 முந்திரியை சேர்க்க வேண்டும். பிறகு அரை மூடி தேங்காயைத் கீறி எடுத்து, பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொண்டு, இதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக அரிந்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் இவை அனைத்தையும் சேர்த்து, அதனுடன் உப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -