சாப்பாடு செய்யும் முறை பற்றி சாஸ்திரம் கூறும் உண்மையென்ன? மீந்து போன பழைய சாப்பாட்டை வீணாக்காதீர்கள்! புத்தம் புதியதாக மாற்ற என்ன செய்யலாம்?

rice-satham-arisi

பொதுவாக நாம் சமைக்கும் உணவு சில சமயங்களில் வீணாக தான் செய்யும். அதிலும் அன்னம் என்கிற சாதம் அடிக்கடி வீணாகிப் போவது குடும்பத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. அன்னத்தை வீணாக்கினால் அன்ன தோஷம் நிச்சயம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். எனவே சாதத்தை சரியாக முடிந்தமட்டிலும் வடிக்க பாருங்கள்! அப்படி முடியாத பட்சத்தில் வீணாகினால் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதலில் சாதம் வடிக்கும் முறையை தெரிந்து கொள்வோம். சாதம் வடிக்க தேவையான அரிசியை கண்ணை மூடிக்கொண்டு அளக்காமல் போடக்கூடாது. அரிசியை அளந்து தான் போட வேண்டும். அரிசி அளக்கும் பொழுது ‘ஓம் அன்னபூரணியை நமஹ’ என்னும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி போடும் பொழுது அள்ள அள்ள குறையாத தானியங்கள் வீட்டில் சேரும் என்பது நம்பிக்கை.

சாப்பாடு செய்யும் பானையை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நீர் கொதித்த பின் தான் அரிசியை போட வேண்டும். ஒரு சிலர் அரிசியில் தண்ணீரை தேவையான அளவிற்கு ஊற்றி அதன் பின்னர் அடுப்பில் வைத்து பற்ற வைப்பார்கள். இது முறையானது அல்ல! இவ்வாறு செய்வதால் நேரமும் அதிகம் செலவாகும். கொதிக்கும் உலையில் சாதத்தை நம் உள்ளங்கைகளில் எடுத்து போடும் பொழுது சாதாரண அரிசி தானியம் கூட சக்தி பெறும். அரிசி எடுத்து உலையில் போடும் பொழுதும் மேற்கூறிய அம்மந்திரத்தை உச்சரிக்கலாம்.

rice3

எப்பொழுதும் சாதத்தை உதிரி உதிரியாக சரியான பதத்தில் வடிக்க வேண்டும். சாதத்தை அரைவேக்காடாகவோ, குழையவோ செய்து விடக் கூடாது. அது போல் மீந்து போகும்படி அதிகமாக சமைக்கவும் கூடாது. அப்படியே மீந்து போனாலும் அந்த சாதத்தை இரவு நேரத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சாதம் செய்து சாப்பிடலாம் அல்லது புதிதாக சாப்பிட விரும்புபவர்கள் இப்படி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

பொதுவாக மீந்து போன சாதத்தை மீண்டும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடுவது உண்டு அப்படி செய்யும் பொழுது நமக்கு புத்தம் புதிதாக சாதம் கிடைக்காது சூடாக இருக்குமே தவிர அது சாப்பிடுவதற்கு புதிய சாப்பாடாக நிச்சயமாக இருப்பதில்லை. மேலும் இருமுறை வடிப்பதால் அதில் இருக்கும் சத்துக்களும் வீணாகும். எனவே அப்படி செய்து சாப்பிடுவதில் பிரயோஜனம் இல்லை, அதற்கு பதிலாக இப்படி ஸ்டீம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

நீங்கள் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடித்தட்டு ஒன்றை மட்டும் கவிழ்த்து வைத்து விடுங்கள். அதன் மீது பாத்திரத்திலோ அல்லது தட்டு போன்ற ஏதாவது ஒன்றை வைத்து அதில் அந்த சாதத்தை போட்டு மூடி வைத்து விடுங்கள். சரியாக பத்து நிமிடத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி அந்த ஆவியின் சூட்டிலேயே இட்லி அவிவது போல சாப்பாடும் சூடாக வெந்துவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாது.

rice-satham

மீண்டும் புதிய சாப்பாட்டை போல பரிமாறி சாப்பிட வேண்டியது தான். ஒரு மணி நேரம் வரை மூடி வைத்திருந்து சூடாகவே சாப்பிடலாம். திருக்குறளை எழுதிய வள்ளுவர் சாதத்தில் இருந்து ஒரு பருக்கை கீழே விழுந்தால் கூட ஊசியால் குத்தி எடுத்து தண்ணீரில் அலசி மீண்டும் சாப்பிடுவாராம். அந்த அளவிற்கு சாதத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அன்னத்தை வீணாக்காமல் ஏழேழு சந்ததியினரும் வறுமை இன்றி தன தானியத்தோடு இருக்க அன்னபூரணியை போற்றுங்கள்.