அதிகம் சாப்பிட்டால் ‘சாப்பாட்டு ராமன்’ என்று ஏன் கூறுகிறார்கள்? ராமனுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

- Advertisement -

ஒருவர் சாப்பாட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது அல்லது விரும்பி சுவைத்து, ரசித்து, ஆக்ரோஷமாக சாப்பிடும் பொழுது அவர்களை நாம் சரியான ‘சாப்பாட்டு ராமன்’ என்று கூறுவது உண்டு. போதும் போதும் என்கிற அளவிற்கு வயிறு முட்ட சாப்பிடும் இந்த சாப்பாட்டு பிரியர்களை இப்படி கூறுவதற்கும், சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இருக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு பின்னணியில் இருக்கும் கதை காரணம் என்ன? என்கிற சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ஸ்ரீ ராமர் ராவணனைப் போரில் வென்று விட்டு அயோத்தி திரும்பும் சமயத்தில் தன் குருவாகிய பரத்வாஜ முனிவரை காண விழைந்தார். அவருடைய ஆசியைப் பெற்றுக் கொண்டு பின்னர் அயோத்தி திரும்புவதாக முடிவு செய்தார். அதன் படியே தம்பி லட்சுமணன், ஹனுமன் மற்றும் சீதையுடன் பரத்வாஜ முனிவரை காண புறப்பட்டார் ராமர். முனிவரை சந்தித்து அவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டனர். அப்போது பரத்வாஜர் தாங்கள் அனைவரும் கட்டாயம் இன்று இரவு உணவருந்தி விட்டு தான் செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அதனை தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் குழம்பித் தவித்த ஸ்ரீராமருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. தம்பி பரதன் இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லும் பொழுது ஏற்றுக் கொண்ட சபதம் ஒன்று உண்டு. 14 ஆண்டுகளுக்குள் அண்ணனாகிய ராமர் அயோத்திக்கு திரும்ப வரவில்லை என்றால் தான் தீக்கிரையாகி தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக சபதம் கொண்டான். 14 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் நாம் அயோத்தி திரும்பவில்லை என்றால் பரதன் தன் உயிரை மாய்த்துக் கொள்வான் என்கிற அச்சம் ராமரை வதைத்தது.

இதற்காக அனுமனிடம் இராமர் நீ அயோத்திக்குச் சென்று பரதனிடம் போரில் வென்று விட்டதாகவும், விரைவில் அயோத்தி திரும்பி விடுவோம் என்கிற இந்த தகவலை கூறி விட்டு வா என்று கட்டளையிட்டார். ராமரின் கட்டளையின்படியே ஹனுமன் அயோத்தி சென்று பரதனிடம் விஷயத்தை கூறிவிட்டு வேகமாக வந்து விட்டார். ஹனுமன் சென்று வர தாமதமாகும் என்பதால் பரத்வாஜர் மற்ற அனைவரருக்கும் இலை போட்டு உணவு பரிமாறி விட்டார் ஆனால் ஹனுமனுக்கு இப்போது இலை இல்லை.

- Advertisement -

ஹனுமன் விரைவாக வந்து விடுவார் என்று ஏற்கெனவே அறிந்திருந்த ராமர் தான் சாப்பிடும் இடையிலேயே ஒருபுறம் சாப்பாட்டையும், இன்னொருபுறம் காய்கறிகளையும் வைத்து பரிமாற சொல்லி இருந்தார். காய், கனிகளை விட சாப்பாட்டை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவர் ராமர், ஆனால் சாப்பாட்டை விட காய், கனிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவர் ஹனுமன். இதனை முன்னமே அறிந்த ராமர் தன் இலையை இவ்வாறு இரண்டாக வகுத்து வைத்திருந்த நிலையில் அனுமனை அழைத்து தனக்கு எதிராக அமர்ந்து சாப்பாட்டை சாப்பிடும்படி செய்து விட்டார். ஒரே இலையில் ராமரும், ஹனுமனும் விருந்தை முடித்து விட்டனர்.

தனக்காக காத்திருக்கும் பரதனின் உயிர் பிரிந்து கூடாது! அதே சமயத்தில் குருவாகிய பரத்வாஜரின் பேச்சை தட்டவும் கூடாது என்பதை மனதில் வைத்து பரத்வாஜ முனிவர் ஆகிய தன் குருவின் இல்லத்தில் அமர்ந்து எப்படியோ இந்த பிரச்சனையை சமாளித்து சாப்பிட்டு விட்டதால் இவருக்கு ‘சாப்பாட்டு ராமன்’ என்கிற பெயர் ஏற்பட்டது. இதனை கருத்தில் வைத்துக் கொண்டே அன்று முதல் இன்று வரை சாப்பாட்டை விரும்பி உண்பவர்களை ‘சாப்பாட்டு ராமன்’ என்று அழைப்பதற்கு காரணம் ஆகிவிட்டது.

- Advertisement -