அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும், நம்முடைய கஷ்டங்கள் கரைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பசு மாட்டிற்கு உணவளிக்க வேண்டும். பசு மாட்டிற்கு உணவளிப்பதன் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரீத்தி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. அப்படி நாம் நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு எந்த பொருளை பசு மாட்டிற்கு தானமாக தரவேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்பட்டு அவர்களால் முன்னேற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்றால் அவர்களுக்கு பாவங்கள் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். அந்த பாவங்களை தீர்ப்பதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் கோமாதா. அந்த கோமாதாவை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும் பட்சத்தில் கோமாதாவிற்கு மரியாதை செலுத்தும் பட்சத்தில் அந்த கோமாதாவிடம் இருக்கக்கூடிய தேவர்களின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படி பெறுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நாம் வாழலாம். அதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தான முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த தானத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஏழு வாரங்களோ அல்லது மாதத்தின் ஒரு நாள் என்று 7 மாதங்களோ வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு உளுந்து தேவைப்படும். ஒரு கைப்பிடி அளவு உளுந்து இருந்தால் கூட போதும். இந்த உளுந்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று சாதத்தை குக்கரில் வைக்காமல் வடித்து அந்த வடிகஞ்சியை எடுத்து அதில் மேலும் தண்ணீரை கலந்து இந்த உளுந்தை அதில் போட்டு கிண்டி கூலாக தயார் செய்து கொள்ளுங்கள்.
இதை பசுமாடு குடிப்பதற்கு ஏற்றார் போல் தண்ணீர் கலந்து உப்பு போட்டு தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்த இந்த கூழை அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதற்கு முன்பாக பசுமாட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை தொட்டு வணங்கி விட்டு பிறகு அந்த கூழை பசு மாட்டிற்கு தரவேண்டும். பசுமாடு அதை குடித்த பிறகு மீதம் சிறிதளவாவது அதில் இருக்கும்.
அதை வீட்டிற்கு எடுத்து வந்து நம்முடைய தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அந்த கஞ்சியை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். இதோடு மட்டும அல்லாமல் நம்முடைய வீட்டில் யாரால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அவர்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது கோமயத்தை தினமும் கலந்து குளித்து வர அவர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.
இதையும் படிக்கலாமே ஆடிப்பூரத்தன்று வாங்க வேண்டிய 3 மங்களப் பொருட்கள்.
இந்த முறையில் நாம் பசு மாட்டிற்கு தானம் செய்வதன் மூலம் மனரீதியான பிரச்சனைகளும் உடல்ரீதியான பிரச்சினைகளும் தீரும். சகல ஐஸ்வர்யம் ஏற்படும். முழு மனதுடன் இந்த தானத்தை செய்து முழு பலனையும் அடைவோம்.