தன் பக்தனுக்கு ஸ்ரீ ராமனாக காட்சி தந்த சாய் பாபா – உண்மை சம்பவம்

Sai baba as sri Ram

மக்களின் குறைகளை தீர்க்க மனித வடிவில் தோன்றியஇறைவனான “ஸ்ரீ சாய் பாபா” தன் பக்தர் ஒருவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதம் இது. புணே நகரத்தில் சாய் பாபாவின் பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகுந்த செல்வந்தரான அவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஷீர்டி சென்று சாய் பாபாவை தரிசித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படி ஒரு சமயம் அவர் ஷீர்டிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது நண்பர் ஒருவர் வந்தார். அவர் ஆங்கில முறையில் மருத்துவம் கற்ற ஒரு மருத்துவர். அப்போது இந்த செல்வந்தர் தான் ஷிர்டிக்கு சென்று சாய் பாபாவை தரிசிக்க உள்ளதாகவும், அந்த மருத்துவ நண்பரும் தன்னுடன் ஷிர்டிக்கு வந்தால் தான் மகிழ்வேன் என்றும் கூறினார்.

Sai baba

அப்போது அந்த மருத்துவ நண்பர், தான் “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை” மட்டுமே கடவுளாக வழிபடுவதாகவும், வேறு யாரையும் அவ்வாறு வழிபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறினார். அப்போது அந்த செல்வந்தர் தனது மகிழ்ச்சிக்காகவாவது தன்னுடன் ஷிர்டிக்கு வருமாறு அந்த மருத்துவ நண்பரை நிர்பந்தித்தார். இதற்கு மேல் மறுக்க முடியாமல் அந்த மருத்துவரும், தனது செல்வந்தர் நண்பருடன் அவரது வாகனத்திலேறி ஷீர்டி நோக்கி பயணமானார்கள்.

சில மணி நேரம் கழித்து ஷீர்டிக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அவர்களின் வாகனம் ஷீர்டியில் சாய் பாபா தங்கியிருக்கும் மசூதியின் முன்பு நின்றது. அப்போது அந்த மருத்துவர் நண்பரை, பாபாவை தரிசிக்க தன்னுடன் வருமாறு அழைத்தார் செல்வந்தர். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மருத்துவர், அந்த செல்வந்தர் மட்டும் சென்று பாபாவை தரிசித்து வருமாறும், தான் இந்த வாகனத்திலேயே அமர்ந்திருப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அந்த செல்வந்தரும் பாபாவை தரிசிக்க அந்த மசூதிக்குள் சென்றார். அதே நேரத்தில் “ஒரு இஸ்லாமிய துறவியை தான் எப்படி வழிபட முடியும்” என்ற எண்ணம் வாகனத்தில் அமர்ந்திருந்த அந்த மருத்துவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

Sai baba story

அப்போது அந்த வண்டியில் அமர்ந்திருந்த வாறே, சாய் பக்தர்கள் சாய் பாபாவை வழிபடுவதை கண்டார் அந்த மருத்துவர். அப்போது சாய் பாபா அந்த மருத்துவரின் கண்களுக்கு அவர் வழிபடும் “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக” காட்சியளித்தார். இதைக்கண்டு மெய் சிலிர்த்த அந்த மருத்துவர், உடனே வண்டியிலிருந்து இறங்கி சாய் பாபாவை நோக்கி ஓடி அவர் காலடியில் விழுந்தார். அப்போது பாபா அவரிடம் “இப்போது எப்படி இந்த இஸ்லாமிய பக்கிரியிடம் நீ வந்தாய்” என அந்த பக்தரின் மன எண்ணத்தை கூற, தனது தவறை உணர்ந்த அந்த பக்தர் அன்று முதல் பாபாவின் பக்தர் ஆனார். உண்மையான துறவிகளுக்கு எந்த வேற்றுமை எண்ணங்களும் கிடையாது என்பதை இதன் மூலம் நிரூபித்தார் பாபா.

இதையும் படிக்கலாமே:
பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

இது போன்ற மேலும் பல சாய் பாபா கதைகள் மற்றும் ஆன்மீக கதைகள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.