புரட்டாசி மாத ஸ்பெஷசல் சைவ மீன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக

saiva meen kuzhambhu recipe
- Advertisement -

மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். என்ன தான் பல வகையான அசைவ குழம்புகள் இருந்தாலும் மீன் குழம்புக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. இந்த புரட்டாசி மாதத்தில் மீன் குழம்பு சாப்பிட முடியாதவர்கள் இப்படி சைவ மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். வாங்க அந்த குழம்பு எப்படி வைப்பது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 10 பல்
வாழைக்காய் – 1
தக்காளி -2
புளி – எலுமிச்சை பழ அளவு
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
உப்பு -1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -1 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த குழம்பு செய்ய முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து இடி உரலில் சேர்த்து நன்றாக நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு இடித்து வைத்த வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதையும் ஊற்றி வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் வதங்கிய பிறகு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு இவை எல்லாம் சேர்த்து வெங்காயம், தக்காளி உடனே நன்றாக வதக்க வேண்டும். குழம்பு மிளகாய் தூள் இல்லாதவர்கள் 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1 1/2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சேர்த்து வதங்கிய பிறகு கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்பை நன்றாக மூடி போட்டு கொதிக்க விடுங்கள். இந்த நேரத்தில் நாம் சைவ மீனை தயார் செய்து விடலாம். வாழைக்காய் நல்ல வட்ட வட்டமாக மீன் போல நடுவில் துளை போட்டு நறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு வாழைக்காய் முற்றிய காயாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த வாழைக்காய்க்கு ஒரு மசாலா தயார் செய்து விடுவோம். அதற்கு கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கலந்து அதில் வாழைக்காய் போட்டு பிரட்டி அடுப்பில் தவா வைத்து எண்ணெய் ஊற்றி வாழைக்காய் பாதி அளவு மட்டும் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சைவப் பிரியர்களுக்கு பலாக்காயில் அட்டகாசமான பிரியாணி ரெசிபி.

அடுத்ததாக வறுத்த வாழைக்காயை ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் சைவ மீன் குழம்பு தயார். இந்த புரட்டாசியில் ஒரு முறை இப்படியும் குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்களேன்.

- Advertisement -