முன்பெல்லாம் நல்ல தண்ணீர் வீட்டிற்குள் வந்திருக்கும். உப்பு கறை என்பதையே நாம் பார்த்திருக்க மாட்டோம், ஆனால் இப்பொழுதெல்லாம் வரக்கூடிய போர்வெல் தண்ணீர் உப்பாகத் தான் வருகிறது. இந்த உப்பு தண்ணீரால் பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பாத்திரம் கழுவும் சிங்க் மற்றும் பாத்ரூம் கதவு, டைல்ஸ் ஆகிய எல்லா இடங்களிலும் விடாப்படியாக பிடித்துக் கொள்கிறது. இந்த உப்பு கறையை என்னதான் கஷ்டப்பட்டு தேய்த்தாலும், அவ்வளவு எளிதில் நீங்காது. இதற்கு ரொம்பவே சுலபமான ஒரு வழி உள்ளது. அது என்ன? எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
பாத்ரூம் டோர் மற்றும் டைல்ஸ் பகுதிகளில் வாரம் ஒரு முறையாவது இரும்பு நார் கொண்டு தேய்க்க, அந்த பகுதி கடினமான உப்புகறை பிடிக்காமல் தடுக்கலாம். அப்படியே மாதக்கணக்கில் நீங்கள் விட்டு விட்டால், கடினமாக பிடித்துக் கொள்ளும். அதை சுத்தம் செய்வது என்பது சற்று சிரமமான விஷயம் தான், வெள்ளை வெள்ளையாக திட்டுக்களாக அசிங்கமாக தெரியும்.
இதற்கு வீட்டில் இருக்கும் நன்கு புளித்து போய் சமையலுக்கு பயன்படாத இட்லி மாவினை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் புளித்த இந்த மாவில் இருக்கும் நுண்ணுயிர்கள் உப்பு கறையை போக்குவதில் முதலிடம் பிடித்துள்ளது. புளித்து நுண்ணுயிர் பெருகிய இந்த மாவில் கொஞ்சம் ஹேர்பிக்கை சேர்த்துக் கொள்ளுங்கள், இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இப்படி செய்யும் போது பயன்படுத்தும் பாத்திரம் ஆனது இதற்கென தனியாக பழைய பிளாஸ்டிக் டப்பா போல ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.
ஒரு டூத் பிரஷ் அல்லது ஏதாவது ஒரு சிறிய அளவிலான பிரஷ்ஷில் தொட்டு உப்பு கறையின் மீது நன்கு தேய்த்து கொடுங்கள். ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு அப்படியே அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். நன்கு ஊறி காய்ந்து வரக்கூடிய அந்த சமயத்தில், கைகளில் ஒரு கிளவுஸ் அணிந்து கொண்டு இரும்பு நாரை வைத்து லேசாக தேய்த்தால் போதும், உப்பு கறை அப்படியே சில்லு சில்லாக பெயர்த்து எடுத்தது போல வரும். பாத்ரூம் கதவுகளில் இப்படி செய்ய எளிதாக கறை வந்துவிடும்.
இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்டம் தேடி வர பூட்டு பரிகாரம்
ஒரு பத்து நிமிடம் தேய்த்து கொடுத்து பின் சுத்தமான நீரினால் கழுவினால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு எல்லா இடங்களும் உப்பு கறை இல்லாமல் பளிச் பளிச் என புதுசு போல மின்னும். பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இது போல தேய்த்து ஊற வைத்து கழுவினால், எளிதாக உப்பு கறையை நீக்கிவிடலாம். உங்களுடைய சிங்க் எவர்சில்வர் அல்லது கடப்பா கல் எதில் செய்திருந்தாலும், இந்த குறிப்பை நீங்கள் செய்து பாருங்கள், நல்ல ரிசல்ட் கிடைக்கும். வீட்டில் புளித்து போன இட்லி மாவை இனி வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை, வீட்டை சுத்தப்படுத்துவதற்கு இப்படி எல்லாம் கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.