விரதங்களில் மூத்த விரதமான சங்கடஹர சதுர்த்தி(31/3/2021) தவறவிடாமல் எளிமையாக விரதம் இருப்பது எப்படி?

vinayagar-vilakku

சதுர்த்தி விரதம் இருந்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை நினைத்து இருக்கும் விரதம் ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ ஆகும். மாதம் தோறும் இவ்விரதம் வந்தாலும் அதனை தவற விடாமல் கடைபிடித்து வழிபாடு செய்பவர்களுக்கு மனதில் என்ன குறை இருந்தாலும் அது உடனடியாக நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய விஷேச பலன்களை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் புதன்கிழமை அன்று வருகிறது. இது மிகவும் விசேஷமானது ஆகும். புதன் கிழமையில் சதுர்த்தி விரதம் முறையாக எளிமையாக எப்படி இருப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vinayagar-abishegam

11 சதுர்த்தி விரதங்கள் கடைபிடிப்பது என்பது நினைத்ததை அடைய செய்யும் என்று நம்பிக்கை. அவ்வகையில் தொடர்ந்து சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அவரை 11 முறை வலம் வந்து பிரதட்சணம் செய்ய வேண்டும். விநாயகருக்கு அர்ச்சனை செய்பவர்கள் அருகம்புல் சாற்றி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை விநாயகரிடம் கூறி முடித்து விட்டு தலையில் குட்டிக் கொண்டு, 9 அல்லது 108 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இப்படி செய்யும் பொழுது உங்களை சுற்றி இருக்கும் தீவினைகள் யாவும் அகலும். தரித்திரங்கள் நீங்கி நல்ல விஷயங்கள் நடைபெறும்.

பின்னர் வீட்டில் சென்று ஒரு ஆழாக்கு அளவிற்கு பச்சரிசியை சுத்தமான தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு வெல்லத்துடன் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை உருண்டைகளாக உருட்டி பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு முடிந்து பசுவிற்கு இவ்வாறு தானம் கொடுக்க மேலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

banana-for-cow

பின்னர் வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு எருக்கம்பூ மாலை சாற்றி அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, வாழைப்பழம், கொய்யா பழம், நாவல் பழம், சுண்டல், மோதகம், தேன், பால், சித்ரான்னங்கள் முதலியனவற்றை வன்னி இலையில் வைத்து நிவேதனம் வைக்கலாம். விநாயகருக்கு உகந்த இலை வன்னி மற்றும் அரச மர இலை ஆகும். இதில் வன்னி இலை கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலன் கொடுக்கும். சங்கட சதுர்த்தி அன்று வன்னி மர விநாயகர் அல்லது அரச மர விநாயகரை வலம் வந்து வணங்குபவர்களுக்கு நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வெளிப்புற இடங்களில், மரத்தடியில், குளக்கரையில் வீற்றிருக்கும் கணபதியை குளத்தில் நீராடிவிட்டு வணங்கி வந்தால் எத்தகைய துன்பங்களும் தீரும் என்பது நம் முன்னோர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்தது. மனிதர்கள், தேவர்கள் என்று அனைவருக்கும் முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகருக்கு உகந்த இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தை மட்டும் தவறாமல் விரதமிருந்து வணங்கி வந்தால் அதைவிட சிறந்த பாக்கியம் இல்லை.

vanni tree

இந்த நாளில் விநாயகர் மந்திரத்தை உச்சரித்து 108 முறை தோப்புக்கரணம் போட்டு தீராத வினையெல்லாம் தீர முழுமனதாக அவரை வேண்டி வணங்கி வந்தால் நிச்சயமாக அவர் உங்களை கைவிடுவதில்லை. நவகிரக தோஷங்கள், தீராத பிணிகள் என்று எவ்வகையான துன்பங்கள் உங்களுக்கு இருந்தாலும் அதற்கு இந்த ஒரு விரதம் மட்டும் இருந்தாலே போதும் அவ்வளவும் நீங்கி நல்லதொரு வாழ்வு அமையும் என்பதை கூறி பதிவை முடித்துக் கொள்வோம்.