சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை நாம் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளால் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது. அதே வகையில் தான் சனிக்கிழமை விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்ய நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த சனிக்கிழமை அன்று எந்த முறையில் வழிபாடு செய்ய நம்முடைய சங்கடங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சங்கடங்களை போக்கும் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழக்கூடியவர் சனி ஈஸ்வர பகவான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவர் மட்டும்தான் நம்முடைய கர்ம வினைகளை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் நமக்கு கஷ்டங்களை தருவார். மேலும் அவருடைய காலத்தில் நம்முடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று கூட கூறலாம். எந்த அளவிற்கு நம்மை கஷ்டப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கஷ்டத்திற்கு உள்ளாக்கி அதன் மூலம் நமக்கு சிறந்த ஒரு படிப்பினையை தரக்கூடியவராக தான் சனீஸ்வர பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சனிக்கிழமை செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் ஒரு பொழுது விரதம் இருப்பது என்பது மிகவும் சிறப்பு. மேலும் அன்றைய தினத்தில் நாம் சமைக்கக்கூடிய சாப்பாட்டை எச்சில் படுவதற்கு முன்பாக காகத்திற்கு வைப்பதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளை பெற முடியும்.
அன்று மாலை 6:00 மணிக்கு அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் ஆஞ்சநேயருக்கு இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அடுத்ததாக நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீப ம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் சனீஸ்வர பகவானுக்கு உகந்த தானியமான கருப்பு எள்ளால் செய்யப்பட்ட எள்ளுருண்டை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தருவதன் மூலம் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்துமே நீங்கும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க சனிக்கிழமை பரிகாரம்
கஷ்டங்கள் அற்ற வாழ்க்கை என்பது யாருக்கும் அமையாது. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அந்த கஷ்டங்களை எதிர்த்து போராடி அதிலிருந்து வெற்றி பெற வேண்டும். அதற்குரிய ஆற்றலை தரக்கூடியவர்களாக தான் விநாயகப் பெருமானும், ஆஞ்சநேயரும் திகழ்கிறார்கள். இவர்கள் இருவரையும் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு கஷ்டங்களும் காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.