சப்த கன்னிகள் வழிபாடு

saptha kannigal
- Advertisement -

பராசக்தியின் அம்சமாகவும் அதேசமயம் பிரம்மா, சிவன், முருகன், வராக மூர்த்தி, விஷ்ணு, இந்திரன், எமன் போன்றவர்களின் அம்சம் பொருந்திய கன்னிகளாக உருவெடுத்தவர்கள் தான் சப்த கன்னிகள். இந்த சப்த கன்னிகளை நாம் முறையாக வழிப்பட்டால் நமக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய குலத்திற்கே பெண்களால் சாபம் ஏற்பட்டு இருந்தாலும் தோஷங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சப்த கன்னிகளை வழிப்பட வேண்டும்.

எந்த காரணத்தினால் திருமணம் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதே தெரியாமல் இருப்பவர்களும் சப்த கன்னிகளை வழிபட திருமண தடை விலகும். சப்த கன்னிகளை முறையாக வழிபடுபவர்களின் வாழ்க்கையில் சர்வ மங்களமும் பெருகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சப்த கன்னிகளை வீட்டில் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த சப்த கன்னிகள் வழிபாட்டை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் மேற்கொள்ள வேண்டும். ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதாக இருந்தால் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளையாவது அதாவது பால், பன்னீர், இளநீர் இப்படி ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொண்டு போய் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்யலாம். அடுத்ததாக மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யலாம். கோவிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியும்.

இதற்கு வீட்டு பூஜை அறையில் எந்த இடத்தில் சப்த கன்னிகள் வழிபாடு செய்யப் போகிறோமோ அந்த இடத்தில் மஞ்சள் தண்ணீரால் சுத்தம் செய்து மாக்கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த இடத்தில் ஒரு சிறிய மனையை வைக்க வேண்டும். அந்த மனைக்கு மேல் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, இரண்டு வாழைப்பழம், சிறிது பூக்கள் இப்படி ஏழு சப்த கன்னிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக ஏழு பேருக்கும் 7 செட்டுகளை வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த வெற்றிலைக்கு முன்பாக அகல் விளக்கை வைக்க வேண்டும். அதாவது ஏழு வெற்றிலை செட்டுகளுக்கு முன்பாக 7 அகல் விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபம் ஏற்றிய பிறகு அவர்களுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் செய்து ஒவ்வொருவருக்கும் சிறிது சிறிதாக ஒரு சின்ன வாழை இலையை வைத்து தனித்தனியாக வைக்க வேண்டும்.

மஞ்சள் தூளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சப்த கன்னிகளின் பெயரையும் 11 முறை கூறி அவர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டும் பொழுதும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கற்பூரத்தை வைத்து காட்டி வைக்க வேண்டும். ஒரே கற்பூரத்தை வைத்து அனைவருக்கும் காட்டக் கூடாது.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் நம்முடைய வீட்டில் நாம் சப்த கன்னிகளின் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அவர்களின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைத்து பெண்களால் ஏற்பட்ட எப்பேற்பட்ட தோஷமாக இருந்தாலும் சாபமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி நம்முடைய வாழ்வில் நன்மைகளை தருவார்கள்.

இதையும் படிக்கலாமே: மாசி வெள்ளி அங்காள பரமேஸ்வரி வழிபாடு

நம்முடைய நியாயமான கோரிக்கையை சப்த கன்னிகளிடம் வைத்து இந்த பூஜையை செய்யும் பொழுது அந்த கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -