சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையில் இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டு விஜயதசமியில் இதை செய்தால் தொட்டதெல்லாம் இனி உங்களுக்கு வெற்றி தான்!

saraswathi-pooja-mantra
- Advertisement -

பிலவ வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள் வியாழன் கிழமை அன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் வெள்ளிக் கிழமையில் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்வருடம் கல்வியும், தொழிலும் சிறக்க, நாம் தொட்டதெல்லாம் வெற்றியாக இந்த பூஜையில் எப்படி வழிபடுவது? கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் இருந்தால் தான் ஒரு மனிதன் முழுமை பெறுகின்றான். இம்மூன்றும் நமக்கும் கிடைக்க நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

durga-lakshmi-saraswathi

துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூன்று தேவியர்களையும் வழிபடும் அற்புத நாளாக இந்நாள் அமைந்துள்ளது சிறப்பிற்கு உரியது. மகிஷாசுரன் என்கிற அரக்கனை அழிக்க அவதரித்த அன்னையை வழிபட்டால் நம் மனதில் இருக்கும் அரக்க குணம் ஒழிந்து, அறிவும் தெளிவும் பெற்று எல்லா செல்வங்களையும் அடைவோம் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. தேவாதி தேவர்களிடமிருந்து ஒளிப்பிழம்பாக தோன்றிய இந்த அன்னையின் 18 கைகளில் இருக்கும் ஆயுதங்கள் அத்தனையும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு பாசக்கயிற்றாகவும் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை அன்று நீங்கள் சர்க்கரை பொங்கல் மற்றும் கொண்டை கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அவரவர் தொழிலுக்கு ஏற்ப அது சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்க வேண்டும். குழந்தைகள் கல்வி அறிவில் சிறக்க நோட்டு புத்தகங்களை வைக்க வேண்டும். கலைகளில் சிறந்து விளங்க கலைக்கு உண்டான பொருட்களையும் நாம் வைக்க வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் இருக்கும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப் போன்ற அத்துணை நவீன உபகரணங்களும் நம்முடைய வாழ்க்கையை செம்மையாக நடத்தி செல்கிறது எனவே எல்லாவற்றையும் சுத்தமாக்கி அவற்றிற்கு சந்தன, குங்கும திலகம் இட்டு பூஜை துவங்க வேண்டும்.

vehicle

வண்டி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றிற்கு எலுமிச்சை மாலை சாற்றி, சந்தன, குங்கும திலகமிட்டு பூஜை செய்ய வேண்டும். சரஸ்வதி தேவிக்கு உகந்த முத்து மாலை சாற்றுவது சிறப்பு. ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் இந்த அத்தனை பொருட்களையும் வைக்க வேண்டும். வெள்ளைத்துணி போடுவது நம்முடைய பக்தியின் தூய்மையை உணர்த்துவதாக இருக்கிறது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நிறைவுற்றாலும் மறுநாள் புனர் பூஜை நிறைவுறும் வரை அங்கிருக்கும் எந்த பொருட்களையும் அகற்றக்கூடாது, கைகளால் தொடவோ கூடாது.

- Advertisement -

மறுநாள் விஜயதசமி அன்று கல்கண்டு போன்ற ஏதாவது ஒரு சிறிய நைவேத்தியம் படைத்து மறுபூஜை என்கிற புனர் பூஜை செய்துவிட்டு பின்னர் வடக்கு திசையில் அத்தனை பொருட்களையும் நகர்த்தி வைக்க வேண்டும். கொழு வைத்திருப்பவர்களும் பொம்மைகளை இந்நாளில் வடக்குப் புறமாக நகர்த்தி விட்டு பின்னர் அவற்றை எடுத்து வைக்க வேண்டும். விஜயதசமி நன்னாளில் புதிய தொழில் துவங்குபவர்கள் அல்லது புதிய கல்வியை துவங்குபவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. குழந்தைகளை அமர வைத்து அன்றைய நாளில் ஓரிரு வரிகளை எழுத வைக்க வேண்டும்.

saraswathi

புதிதாக நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். அதில் பிள்ளையார் சுழி போட்டு லாபம் என்று எழுத வேண்டும். அந்த நோட்டுப் புத்தகத்தில் குழந்தைகளை எழுத வைப்பது சிறப்பு. அதே போல இல்லத்தரசிகள் வரவு செலவு கணக்கு பார்ப்பவர்கள் அந்த புத்தகத்தில் புதிதாக கணக்கை துவங்க, லாபம் பன்மடங்கு பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. வீட்டிற்கு வருபவர்களுக்கு சர்க்கரை பொங்கல் ,சுண்டல் நைவேத்யம் கொடுத்து வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய தாம்பூலம் கொடுத்து வழி அனுப்புங்கள். இவ்வாறாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் அனைவரும் கொண்டாடி மகிழலாமே.

சரஸ்வதி பூஜை எளிய மந்திரம்:
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா!!

- Advertisement -