சனிக்கிழமை சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானை வழிபடும் முக்கியமான விரதங்களில் ஒன்று. சஷ்டி விரதம் எனப்படும் போது, அது பெரும்பாலும் கிருத்திகை நக்ஷத்திரம் அல்லது சஷ்டி திதி (சுக்ல அல்லது கிருஷ்ண பக்ஷ சஷ்டி) வந்தால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில், சனிக்கிழமையுடன் சஷ்டி சேரும் போது அதற்கு மேலும் மகத்துவம் உண்டு என நம்பப்படுகிறது. சனிக்கிழமை சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
சனிக்கிழமை சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்:
சனிக்கிழமையன்று விரதம் இருப்பது சனி தோஷங்களைக் குறைக்கும். சஷ்டி விரதம் முருகனுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டது. இரண்டும் சேரும் போது, சனி பகவானின் அருள் மற்றும் முருகப் பெருமானின் ஆசீர்வாதங்கள் இரண்டும் கிடைக்கும். சனி பகவானுடைய தோஷங்களில் இருந்து விடுபட்டு, பாவ விமோசனம் கிடைக்க சனிக்கிழமையில் வரக்கூடிய சஷ்டி விரதத்தின் பொழுது முருகனை வழிபடலாம்.
சனிக்கிழமை சஷ்டி விரதம் எப்படி அனுசரிக்கப்படுகிறது?
காலையில் விரத நியமங்களோடு சீக்கிரமே எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும். முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்யலாம். உச்சி நேரத்தில் முருகனை வழிபட்டு, சஷ்டி கவசம் அல்லது கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். பலர் உணவேதும் உண்ணாமல் உபவாசம் மேற்கொள்கிறார்கள். சிலர் பழம், பால் போன்ற சாத்வீக உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் மேற்கொள்கிறார்கள். இரவு பஜனை அல்லது கந்த புராணம் பாராயணம் செய்துவிட்டு விரதத்தை முடிக்கலாம்.
வீட்டில் பூஜை செய்பவர்கள் பூஜை அறையை அலங்காரம் செய்து முருகனை மனையில் அமர்த்தி அவருடைய வேலுக்கும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். துன்பங்களை போக்கக்கூடிய அற்புத சக்தி முருகனுடைய வேலுக்கு உண்டு. “வேலுண்டு வினையில்லை” என்ற பழமொழியும் இதனால் தான் உண்டாகியது. வேல் வழிபாடு செய்பவர்களுடைய இல்லத்தில் எந்த விதமான வினைகளும் அதாவது துன்பங்களும் இருக்காது.
முருகன் மற்றும் அவருடைய வேலுக்கு முதலில் சுத்தமான நீரால் அபிஷேகம் செய்து, பின்னர் பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். பிறகு பாலால் அபிஷேகம் செய்யுங்கள். பின்னர் மற்ற அபிஷேக பொருட்களை நீங்கள் வரிசையாக பயன்படுத்தலாம். சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது, பஞ்சாமிர்தம், தயிர், எலுமிச்சை, விபூதி, கரும்புச்சாறு, பழ ரசங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி நீங்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய ஒவ்வொரு பொருட்களுக்கும், ஒவ்வொரு குறைகளை நீக்கக் கூடிய சக்தி இருக்கிறது.
இதையும் படிக்கலாமே:
3-5-2025 நாளை வளர்பிறை சஷ்டி
பின்னர் பூக்களால் அலங்காரம் செய்து வெற்றிலை தீபம், நெய் தீபம் போன்றவற்றை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். வெற்றிலை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும், புத்திர பாக்கியம் ஏற்படும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். தடைகளை தாண்டிய முன்னேற்றம் நிச்சயம் உங்களுக்கு முருகன் அருளால் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த சனிக்கிழமை சஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பாப விமோசனம், மன அமைதி, குடும்ப நலன், சுகம் மற்றும் குழந்தைப்பேறு போன்ற பல ஆசிகளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.