சேலத்து ஸ்பெஷல்! பாசிப் பருப்பு டிபன் சாம்பாரை மணக்க மணக்க எப்படி வைப்பது? நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

sambar
- Advertisement -

இட்லி, தோசை, பொங்கலுக்கு சைட் டிஷ்ஷாக ஒரு டிபன் சாம்பாரை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சாம்பார் சேலத்து பக்கம் ரொம்ப ஃபேமஸ். சேலம் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஸ்பெஷலான சேலத்து டிபன் சாம்பார் எப்படி வைப்பது என்று நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க. இன்னைக்கு ராத்திரி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை உள்ளே இறங்குவதே தெரியாது. சரி, ரெசிபிக்கு போலாம் வாங்க.

முதலில் ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து விடுங்கள். அதில் 100 கிராம் அளவு பாசிப்பருப்பை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்பை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள். குக்கரில் தயாராக இருக்கும் 100 கிராம் அளவு பாசிப்பருப்பில், தோல் உரித்த பூண்டு பல் – 10, தக்காளி பழம் நறுக்கியது – 3, பச்சை மிளகாய் – 5 லிருந்து 6 காரத்திற்கு ஏற்ப, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு இந்த பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி 3 லிருந்து 4 விசில் விட்டு விடுங்கள். (இந்த குழம்புக்கு பச்சை மிளகாய் காரம் மட்டும்தான் காரம் தரவேண்டும். மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன் அளவு குழம்பில் சேர்ப்போம்.)

- Advertisement -

குக்கர் விசில் வரட்டும். இதற்குள் இதற்கு தேவையான ஒரு தேங்காய் அரவையை நாம் அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் பாசிப்பருப்பை அளந்து எடுத்தீர்களோ, அதே அளவு தேங்காய் நமக்குத் தேவை. தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். தேங்காயுடன், 1 – ஸ்பூன் சோம்பு சேர்த்து இந்த தேங்காயை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். இதற்குள் நமக்கு குக்கரில் விசில் வந்து பருப்பும் தயாராகி இருக்கும் அல்லவா. அதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக குழம்பை தாளித்த செல்வோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 – டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 அரை ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15 லிருந்து 20 பல் பொடியாக நறுக்கிய, பச்சைமிளகாய் – 1, ஒரு கொத்து கறிவேப்பிலை இந்த பொருட்களை சேர்த்து வெங்காயத்தினை பச்சை வாடை போகும் வரை வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் பச்சை வாடை நீங்கியதும் 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூளை வெங்காயத்துடன் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி விட்டு, உடனடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, 1 நிமிடம் கொதிக்க வையுங்கள் போதும். அடுத்தபடியாக வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு தக்காளியை ஒரு மத்து போட்டு கடைந்து அதை அப்படியே கடாயில் கொதித்துக் கொண்டிருக்கும் தேங்காய் விழுதுடன் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக சாம்பாரை கொதிக்க வைக்க வேண்டும்.

sambar2

அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு இந்த குழம்பை கொதிக்க வைக்கவேண்டும். 5 நிமிடங்கள் சாம்பார் தளதளவென நன்றாகக் கொதிக்கட்டும். இந்த சாம்பார் ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது. கொஞ்சம் தண்ணீராகத் தான் இருக்க வேண்டும். சாம்பார் நன்றாக ஆறியதும் கெட்டியாக வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இறுதியாக இந்த சாம்பாருக்கு மேலே பச்சை கறிவேப்பிலை, பச்சையாக இருக்கும் கொத்தமல்லி தழைகளை நறுக்கித் தூவி, அப்படியே பரிமாறி பாருங்கள். சுட சுட இட்லி தோசை மேல் ஊற்றி இந்த சாம்பாரை சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -