மாதத்தில் இரண்டு முறை சஷ்டி திதி என்பது வரும். பௌர்ணமி முடிந்து வரக்கூடிய சஷ்டி திதியை தேய்பிறை சஷ்டி என்றும் அமாவாசை முடிந்து வரக்கூடிய சஷ்டி திதியை வளர்பிறை சஷ்டி என்றும் கூறுவோம். இந்த சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அப்படி வழிபாடு செய்யும்பொழுது பெண்கள் செய்ய வேண்டிய சில செயல்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ வளம் பெருக சஷ்டி திதி வழிபாடு
பொதுவாக சஷ்டி திதி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு திருமண தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நமக்கு இருக்கக்கூடிய காரிய தடைகள் விலக வேண்டும் என்றாலும் சஷ்டி திதி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விரதம் இருக்காவிட்டாலும் இந்த வழிமுறைகளை வீட்டில் இருக்கும் பெண்கள் பின்பற்றும் பொழுது செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருக்கும் பெண்கள் காலையிலும் மாலையிலும் சஷ்டி திதி அன்று நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். புதிதாக தங்கம் நகைகள், ஆடை, நிலம், மனை, வீடு என்று புதிதாக வாங்குவதை சஷ்டி திதியில் செய்தால் அது பன்மடங்கு பெருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து ஆறு இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்து வாசனை மலர்களை மாலையாக கட்டி முருகப்பெருமானுக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் முருகப்பெருமானின் சிலையோ வேலோ இருக்கும் பட்சத்தில் சஷ்டி திதி அன்று மாலை நேரத்தில் அதற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
அதேபோல் அன்றைய தினம் தயிர் சாதத்தை அன்னதானமாக தங்களால் இயன்ற நபர்களுக்கு தருவதன் மூலமும் செல்வ செழிப்பு உண்டாகும். அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபாடு செய்து விட்டு பிரசாதமாக தரக்கூடிய விபூதியை வாங்கி வந்து வீட்டில் வைப்பதன் மூலமும் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. பெண்களால் ஆலயத்திற்கு செல்ல இயலாது என்னும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவரை அனுப்பியாவது முருகப்பெருமானின் ஆலயத்தில் தரக்கூடிய விபூதியை வாங்கி வந்து வீட்டில் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் ராகு காலம் எமகண்டத்தை தவிர்த்து ஒரே ஒரு முறையாவது கந்த சஷ்டி கவசத்தை நிறுத்தி நிதானமாக பாராயணம் செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் பெண்கள் பச்சை நிற ஆடையை அணிவதன் மூலம் முருகப்பெருமானின் அருளை பெற முடியும். அதேபோல் வீட்டில் இருக்கும் அனைவரும் அன்றைய தினம் மட்டுமாவது விபூதியை நெற்றி நிறைய பூசிக்கொள்ள வேண்டும். தங்களால் இயன்ற அளவு காலையிலிருந்து இரவு படுக்கச் செல்லும் வரை “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரிக்காமல் இருப்பது நல்லது.
இதையும் படிக்கலாமே:பணத்தடை விலக பரிகாரம்
இந்த வழிமுறைகளை ஒவ்வொரு சஷ்டி திதியிலும் பின்பற்றுபவர்களின் இல்லத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.