ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடன் சனி பகவான் இணைந்து இருந்தாலோ அல்லது ராகு இணைந்து இருந்தாலோ வரக்கூடிய பிரச்சனைகள், பெரும் கண்டமாக அமையும். தோஷம் பெற்ற இந்த ஜாதகக்காரர்களுக்கு எந்த மாதிரியான தொந்தரவுகள் வரும்? அதிலிருந்து விடுபடுவதற்கு எளிய பரிகாரம் என்ன? என்னும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை தான் இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
செவ்வாயுடன் சனி இணைந்து இருந்தால், விபத்துகள் நேரலாம். அறுவை சிகிச்சை செய்வதற்கு வாய்ப்பு உண்டு. கோபம் அதிகரிக்கும், இதனால் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். கணவன் மனைவிக்குள் விரிசல்கள், சண்டை சச்சரவுகள் எப்போதும் காணப்படும். தொழில் ரீதியான தடைகளும், கடன், சொத்து தகராறுகள் போன்றவையும் நாம் சந்திக்க நேரிடும். உடம்பில் ஏதாவது ஒரு வலி, மூட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் பாதிப்புகள், காயங்கள் போன்றவை இவர்களின் இணைவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகும்.
செவ்வாய் பகவானுடன் ராகு இணைந்து இருந்தால், அதுவும் தோஷமாக கருதப்படுகிறது. கோபத்தை அதிகரிக்க கூடிய இணைவு இது! தவறான முடிவுகளை எடுப்பார்கள். தேவையில்லாத இடங்களில் கோபப்பட்டு, தங்களின் குண நலனை கெடுத்துக் கொள்வார்கள். வாகன விபத்துகளை சந்திப்பார்கள். சட்ட ரீதியான பிரச்சனைகளை, எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு சாதாரண வாழ்க்கையில் இருந்து விலகி, சிக்கல்களை உருவாக்கிக் கொள்வார்கள். குழப்பங்கள் அதிகரிக்கும். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள். தவறான உறவுகள், திருமண தடைகள் போன்றவற்றையும் சந்திப்பார்கள். எதை செய்தாலும் அதில் நெருக்கடி ஏற்படும்.
செவ்வாயுடன் இணையக்கூடாத இந்த இரண்டு கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இணைந்து விட்டால், நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இதிலிருந்து நீங்கள் விடுபடுவதற்கு எளிய பரிகாரத்தை மேற்கொள்ளலாம். சிகப்பு காராமணி வாங்கி அதில் சுண்டல் தயார் செய்யுங்கள். இதனை செவ்வாய்க் கிழமையில் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று நைவேத்தியம் படைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்.
சிகப்பு காராமணி சுண்டல் செவ்வாய் தோஷங்களை நீக்கக்கூடிய அற்புதமான தானியம் ஆகும். இந்த தானியத்தைக் கொண்டு பரிகாரம் செய்யும் பொழுது தோஷ நிவர்த்தி அடைகிறது. செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும். மேலும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள், மாதவிடாய் கோளாறுகள் உள்ளவர்கள், மாங்கல்ய பலம் பெற விரும்புபவர்கள் இந்த தானிய பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:
பொடி பாவக்காய் தொக்கு
குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் நவகிரக சன்னிதியில் செவ்வாய் பகவானுக்கு சிகப்பு வஸ்திரம் சாற்றி, இந்த சிகப்பு நிற சுண்டலை நைவேத்தியம் படைத்து, பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும். விபத்துகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொண்டவர்கள் தொடர்ந்து அது போல் நடக்காமல் இருக்க, இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு உரிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், அதற்குரிய பரிகாரங்களை செய்யும் பொழுது, மேலும் மேலும் பிரச்சினைகளில் சிக்காமல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்பது போல நிம்மதியாக இருக்கலாம். வாராவாரம் செவ்வாய்க் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெறுங்கள்.