கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு

siddhar
- Advertisement -

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகு முத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.

temple

“பழங்காலத்தில் இப்பகுதியில் இலுப்பை மரங்களும், ஆலமரங்களும் நிறைந்து அடர்ந்திருந்தன. ஆலமரம் ஒன்றின் அடியில் சிறிய கோயில் கட்டி, அதில் உள்ளே கல் ஒன்று நட்டு அதை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர் கிராம மக்கள். ஒரு நாள், வழிப்போக்காக வந்த சித்தர் ஒருவர் இந்த ஆலமரத்தின் பொந்தில் சிறிது நேரம் தங்கினார்.

- Advertisement -

அவருக்கு அந்த இடம் பிடித்துப் போனதால், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். பின்னர், ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதமிருந்து அந்தக் கோயிலுக்குப் பூஜை செய்துவந்த அந்தச் சித்தர், கோயிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்துவைத்தாராம். காலப்போக்கில், அப்பகுதி மக்கள் அழகர் சித்தர் என்றே அவரை அழைக்கத்தொடங்கினர்.

temple

தினமும் கிராமத்துக்குள் சென்று மக்களிடம் யாசகம் எடுப்பது சித்தரின் வழக்கம். அந்த யாசகத்தில் கிடைத்த அரிசியைச் சேர்த்துவைத்து, ஒவ்வொரு திங்கள்கிழமையும் பொங்கி கோயிலில் படையலிட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுப்பார். அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்ட மக்கள் நோய்நொடிகள் நீங்கி நலமுடன் வாழத் தொடங்கினர்; ஏவல், பில்லி சூனியம்  முதலான தீவினைகளால் பாதிப்படைந்தவர்களும் நலம் பெற்றனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் மத்தியில் சித்தருக்கு வரவேற்பு கூடியது.

- Advertisement -

சித்தர் பெருமான் அவதரித்தது, சித்திரை மாதம் முதல் திங்கள்கிழமை. ஒவ்வொரு சித்திரை மாதம்  திங்கள்கிழமையும் ஊர்மக்களை அழைத்து உபதேசம் செய்வார். நிறைவாக ஒரு திங்கள் அன்று, ‘நான் உங்கள் நலனுக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கப்போகிறேன்’ என்று கோயில் கிணற்றில் இறங்கினார்.

siddhar

வெகுநேரமாகியும் அவர் கிணற்றைவிட்டு வெளியில் வரவில்லை. பதறிப்போன கிராம மக்களும், பக்தர்களும் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். சித்தர் கிடைக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் தன் உடலை மறைத்துக்கொண்டு சித்தர் ஜோதியாகிவிட்டார்  என்ற உண்மை. அப்படி சித்தர் ஜலசமாதியான கிணற்றையே மக்கள் பால், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து தரிசிக் கின்றனர்.

- Advertisement -

பிற்காலத்தில், அபிஷேகிக்கும் திரவியங்கள் கிணற்றுக்குள் செல்லும்விதமாக மூன்று துளைகளோடு மேடை அமைத்தனர்.அந்தக் கிணறே மூலஸ்தனமாக திகழ்கிறது.  அதன்பின்னரே அந்தக்கோயில் ‘ஸ்ரீஅழகு முத்தையனார் கோயில்’ என்று பெயர் பெற்றது” என தல வரலாறு சொல்கிறார் குமார்.

அழகர் சித்தர் சமாதியான கிணற்றின் மேடையில் தினம்தோறும் காலையில் ஒரு கால பூஜை நடைபெறும். கிணற்றின் மேற்கூரையில் தெளிக்கப்படும் விபூதியானது மறுநாள் பூஜை வரை ஈரப்பதத்துடன் இருப்பது இந்த கோவிலின் சிறப்பாக கூறப்படுகிறது.

temple

நேத்திக்கடன் சிறப்பு
இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு நேர்த்திக் கடனுக்காக பொம்மைகளை செய்து வைப்பதுதான். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இங்கு வந்து சித்தர் ஆலயத்தில் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்வார்கள். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்த உடன் ஆண் குழந்தையாக இருந்தால் ஆண் பொம்மையையும், பெண் குழந்தையாக இருந்தால் பெண் பொம்மையையும் செய்து இந்த வேப்ப மரத்தடியில் வைத்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வக்கீல், இஞ்சினியர், டாக்டர், டீச்சர், போலீஸ் இப்படிப்பட்ட நல்ல வேலையில் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அந்த வேண்டுதல் நிறைவேற்றப்பட்ட உடன் அந்தந்த உடையில் பொம்மைகள் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். இப்படியாக இங்கு வைக்கப்பட்ட பொம்மைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கும். இங்கு உள்ள ‘அழகு முத்தையனார்’ உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர் என்பதற்கு சாட்சி இங்குள்ள பொம்மைகள் தான்.

- Advertisement -