- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎளிமையாக வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் முறை

எளிமையாக வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் முறை

- Advertisement -

ஒவ்வொரு பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விரதம் என்றால் அது வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதம் ஆனது வருடத்திற்கு ஒருமுறை வரும். அதுவும் இந்த வருடம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது என்பது கூடுதல் சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் வளர்பிறை ஏகாதேசி என்பதால் நாம் செய்யக்கூடிய வழிபாட்டின் பலன் என்பது நமக்கு இரண்டு மடங்காக கிடைக்கும். அப்படிப்பட்ட வரலட்சுமி விரதத்தை வறுமையில் இருப்பவர்கள் கூட எந்த அளவிற்கு எளிமையாக செய்யலாம் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமியின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைக்கும் பொழுது தான் அவர்களுக்கு செல்வ செழிப்பு என்பது மேலோங்கும். அப்படி செல்வ செழிப்பு மேலோங்குவதற்காக செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறை தான் வரலட்சுமி விரதம். இதை வசதி மிக்கவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைக்கக் கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் மிகவும் எளிதில் செய்யலாம். எப்படி செய்தாலும் முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் அந்த இடத்தில் மகாலட்சுமி தாயார் அருள் புரிவார் என்பது உண்மை.

- Advertisement -

சாதாரணமாக அம்மனின் படத்தை வைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலையில் முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து அவரை வழிபாடு செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு மகாலட்சுமியின் படத்தை ஒரு மனையில் வைத்து மகாலட்சுமிக்கு முன்பாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தாலி சரடு, சிறிது குங்குமம், சிறிது மஞ்சள் தூள் இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களால் இயன்ற அளவு மலர்களை வாங்கி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அர்ச்சனைக்காக உதிரி மலர்களை வாங்கிக் கொள்வதாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இயலாத பட்சத்தில் சிறிது பச்சரிசியில் மஞ்சள் நெய் இதை கலந்து அச்சதையாக தயார் செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்யலாம். மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்று சர்க்கரை பொங்கல். சிறிது நெய் விட்டு சர்க்கரை பொங்கல் செய்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களால் இயலும் பட்சத்தில் ஒரு டசன் கண்ணாடி வளையளையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள் இவற்றில் எது கிடைக்கிறதோ அதையும் வாங்கி வைத்து அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து வந்து உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி தாயாரின் போற்றிகளை கூறி அந்த அச்சதையை பயன்படுத்தி மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்யலாம்.

அப்படி எதுவும் தெரியாது என்னும் பட்சத்தில் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ” என்னும் மந்திரத்தை மட்டுமாவது 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்த பெண்களையும் அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். அர்ச்சனை அனைத்தும் முடிந்த பிறகு ஆராத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்து வைத்த சர்க்கரை பொங்கலை கொடுத்துவிட்டு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்திருந்த குங்குமம், மஞ்சள் தூள் இவற்றை எடுத்து வைத்துக்கொள்ள சொல்ல வேண்டும். உங்களுக்கும் வைத்துவிட சொல்ல வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாலி சரடு, விரலி மஞ்சள், கண்ணாடி வளையலில் நான்கு என்ற வீதம் ஒவ்வொரு சுமங்கலி பெண்களுக்கும் கொடுக்கலாம். உங்களால் இயலும் பட்சத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இவற்றையும் வைத்து கொடுக்கலாம். மிகவும் எளிமையான இந்த முறையில் நாம் வழிபாடு செய்தாலும் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இப்படி வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் அடுத்த வருடம் இதைவிட சிறப்பாக வழிபாடு செய்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே வரலட்சுமி விரதத்தன்று செய்யக்கூடாதது என்னென்ன

மிகவும் எளிமையான முறையில் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்வதை பற்றி இந்த பதிவில் நாம் பார்த்தோம். முழு மனதுடன் இந்த பூஜையை செய்து மகாலட்சுமியின் அருளை பெறலாம்.

சற்று முன்