விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பது தான் நம் பாரம்பரிய பழக்கம். விநாயகருக்கு மட்டுமல்லாமல் சிதறு தேங்காய் மற்ற சில தெய்வங்களுக்கும் உடைக்கப்படுவது உண்டு. மாரியம்மன், முருகன், கருப்பண்ண சுவாமி, சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கும் சிதறு தேங்காயை உடைத்து விட்டு செல்வது உண்டு. இப்படி உடைக்கப்படும் சிதறு தேங்காய் எந்த வடிவில் உடைகிறது? என்பதை பொறுத்து பிரசன்னமும் சொல்வது உண்டு. எந்தப் பிரச்சினைக்கு எவ்வளவு சூரத் தேங்காய் உடைக்க வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் புராண காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது. கசியப முனிவர் ஆசிரமத்தில் விநாயகர் தங்கி இருக்கும் பொழுது, பூஜைக்கு தடையாக ஒரு அசுரன் வரவே, கலசத்தில் இருக்கும் தேங்காய்களை எடுத்து அவன் மீது வீசி பொடிப்பொடி ஆக்கினார் விநாயகர். அப்போது முதல் சிதறு தேங்காயை உடைத்தால் துன்பமெல்லாம் சிதறும் என்பது நம் பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் சிதறி உடைவது போல சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது நம்மிடமிருந்து இவை உடைக்கப்பட்டு சுத்தமான ஆன்மாவுடன் கோவிலுக்குள் செல்கிறோம். காரியத்தடை ஏற்படாமல் இருக்கவும், வெற்றி மீது வெற்றியை அடையவும், வேண்டுதல் நிறைவேறவும், குடும்ப பிரச்சனைகள் தீரவும், தொழில் முன்னேற்றம் அடையவும் சிதறு தேங்காயை உடைப்பார்கள்.
இப்படி உடைக்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பலன்களும் உண்டு. ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பதால் நினைத்த அல்லது செல்லும் காரியம் தடை இல்லாமல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. தடைகளை தகர்த்தெறிய வழி பிள்ளையாருக்கு ஒரு சிதறு காயை உடைத்து விட்டு செல்லலாம். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என்று ஒற்றைப்படையில் தான் சிதறு தேங்காயை உடைப்பார்கள். இரண்டு, நான்கு என்கிற ரெட்டை படையில் சிதறு தேங்காயை உடைக்கக்கூடாது.
பெண்கள் சிதறு தேங்காயை உடைக்கக்கூடாது. ஆன்மீக ரீதியாக இது அவர்களுக்கு துன்பம் தரும் செயலாக கருதப்படுகிறது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டில் கூட தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய் சரிசமமாக உடைந்தால் செல்வம் பெருகும், செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் உயர்ந்து காட்டவும், நல்ல வேலையில் அமர வேண்டும் என்று விரும்புபவர்களும், நோயால் வாடுபவர்களும் மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைத்து வேண்டுதல் வைக்க வேண்டும்.
படிக்கின்ற குழந்தைகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க, ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சூரத்தேங்காய்களை உடைத்து வழிபட வேண்டும். நன்றாக படித்துவிட்டு தேர்வில் வெற்றி பெற பிள்ளையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என்று இப்படி வேண்டிக் கொள்ளலாம், நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். தீராத கடன் தொல்லைகள் தீர்ந்து, மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய்களை உடைத்து பிள்ளையாரை வழிபடுங்கள். பிள்ளை இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற 9 தேங்காய்களை பிள்ளையாருக்கு உடைத்து புதன்கிழமையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் குலவிருத்தி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
கடலை சட்னி ரெசிபி
அதுபோல 11 சிதறு தேங்காய்களை உடைத்து பிள்ளையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டால், திருமண தடைகள் அகலும். திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகள் சீக்கிரம் நல்ல மணமகள் அமைய 11 எண்ணிக்கையில் தேங்காயை உடைக்கலாம். பிரசன்னம் பார்க்கும் பொழுது தேங்காய் அழுக கூடாது, முடி பாகம் இரண்டாக உடைய கூடாது, உடைக்கும் முன்னரே கை நழுவி தேங்காய் கீழே விழக்கூடாது, தேங்காய் ஓட்டை விட்டு தனியாகப் பிரிந்து வெளியே வரக்கூடாது. இப்படி தேங்காய் உடைந்து இருந்தால் சகுனத்தில் தடை இருப்பதாக நம்பிக்கை உண்டு. மற்ற எந்த வகையில் தேங்காய் உடைந்தாலும், நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும், சிறப்பான பலன்களும் உண்டாகும்.