இட்லி மாவு அரைத்த பின்பு ஊற வைக்கும் பொழுது நன்கு புளித்து உப்பி புசுபுசுவென எழும்பி வர வேண்டும். அப்பொழுது தான் இட்லி சுடும் பொழுது மெத்தென்று பஞ்சு போல வரும். என்ன தான் இட்லி மாவை கடையில் வாங்கினாலும் சரி, வீட்டில் அரைத்தாலும் சரி இட்லி கல்லு போல் தான் வருகிறது என்பவர்களுக்கு இந்த சமையல் குறிப்பு பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
நம் வீட்டில் அரைத்தால் கூட பார்த்து பார்த்து பக்குவமாக இட்லி மாவை அரைத்து விடுவோம். பல சமயங்களில் நாம் வீட்டில் அரைக்கும் மாவு எவ்வளவோ மேல் என்று தோன்றும். ஆனால் கடையில் வாங்கினாலோ இட்லி மட்டும் கல்லு போல தான் வரும். கடையில் வாங்கிய மாவு தோசைக்குத் தான் லாயக்கு என்பது போல் ஆகிவிடும். இது போன்ற சமயங்களில் இந்த ஒரு எளிமையான வழிமுறையை பின்பற்றினால் எப்பேர்ப்பட்ட மாவிலும் இட்லியை மிருதுவாக சுட்டு எடுக்கலாம்.
பொதுவாக இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது உளுந்தின் மீது தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். உளுந்து பந்து போல நன்கு பொங்க பொங்க உபரியாக ஆட்டி எடுத்தால் மட்டுமே மாவு எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் இட்லி பூப்போல சுட்டு எடுக்க முடியும். கடையில் மொத்தமாக விற்பனை செய்பவர்கள் இந்த அளவிற்கு உளுந்தின் மீது கவனம் செலுத்துவது கிடையாது. அதனால் தான் கடையில் வாங்கிய மாவில் இட்லி சரியாக வருவதில்லை.
இட்லி மாவு புளித்து நுரைத்து பொங்கி வந்த பின்பு அதைப் போட்டு நன்கு கலந்து விடக் கூடாது. பட்டும் படாமல் மென்மையாக கலந்து வைக்க வேண்டும். மாவின் உள்ளே காற்று நுழைவதற்கு ஏற்ப சிறு சிறு துளைகள் உண்டாகி இருக்கும். இந்த துளைகள் இல்லாமல் இறுகி போய் இருக்கும் மாவில் தான் இட்லி கல் போல வருகிறது.
இட்லி பஞ்சு போல வர டிப்ஸ் இதோ:
இப்பொழுது வாங்கிய மாவில் நீங்கள் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதன் மூலம் இட்லி மிகவும் சாஃப்ட்டாக, மிருதுவான தன்மையுடன் வரும். கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி அவித்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:
முருங்கை கீரை உளுந்த வடை எளிமையாக செய்வது எப்படி?
இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின்பு தான் இட்லி தட்டினை வைத்து மாவை ஊற்ற வேண்டும். சரியாக 10 லிருந்து 15 நிமிடம் குறையாமல் மாவின் தன்மைக்கு ஏற்ப அவித்து எடுத்தால் போதும், இட்லி நன்கு பந்து போல உப்பி வரும். தேங்காய் எண்ணெயின் வாசம் இட்லியில் அவ்வளவாக வருவதில்லை எனினும் உங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயும் சேர்க்கலாம். நல்லெண்ணெய் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து இட்லி சுட்டு பாருங்கள் வீடே மணக்கும்.