இன்று சோமவார பிரதோஷம்! நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளியே வர சிவபெருமானை வீட்டில் இருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது?

shiva-lingam

பொதுவாகவே சனி பிரதோஷம் என்றால், அதை மகா பிரதோஷம் என்று சொல்லுவார்கள். அதற்கு அடுத்தபடியாக சிவனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷமும் சிறப்பு வாய்ந்த பிரதோஷம் தான். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை. இன்றைய பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வீட்டிலிருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது, என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களைத் தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். திங்களை தன்னுடைய தலைமீது சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த இந்த திங்கட்கிழமை அன்று, வந்திருக்கும் பிரதோஷ நன்னாளில் மனமுருகி வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதலை எம்பெருமான் உடனே நிறைவேற்றி வைப்பார் என்பதும் நம்பிக்கை.

sunai lingam

அனைவருமே, தீராத இந்த கொடிய வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை. இந்த கஷ்டத்திலிருந்து நாம் மட்டுமல்ல, நம்முடைய நாடே வெளிவரவேண்டும் என்று இன்றைய நாளில், இந்த பிரதோஷ தினத்தில் அந்த எம்பெருமானை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கருத்தை நினைவில் கொண்டு இந்தப் பதிவினை தொடங்குவோம்.

எப்போதும்போல இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் சிவபெருமானை நினைத்து பூஜை அறையில் அமர்ந்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில் சிவலிங்கம் இருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு உங்களால் முடிந்த அபிஷேகம் செய்து, பூஜை அறையில் வைத்து பூக்களால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.

Siva Lingam

சிவலிங்கம் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். மஞ்சளில் சிவலிங்கத்தை பிடித்து வைத்து இந்த வழிபாட்டினை நீங்கள் மேற்கொள்ளலாம். எதுவுமே முடியாதவர்கள் நீங்கள் ஏற்றி வைத்த தீப சுடரை சிவபெருமானாக நினைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை வைத்தாலும் அது பலிக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

பிரதோஷ காலம் தொடங்கும் சமயத்தில் உங்களுடைய பூஜை அறையில் அமருங்கள். தீபச்சுடரில் சிவபெருமானே ஆவாகனம் செய்து கண்களை மூடி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரித்து சிவபெருமானை மனதார வேண்டி மனமுருகி ‘இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை, நோயால் கஷ்டப்பட்டு வருபவர்களின் நிலைமை, அனைத்தும் மாறவேண்டும். சீக்கிரமே நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டுமென்று’, அனைவரும் சிவபெருமானை இன்றைய தின பிரதோஷ காலத்தில் ஒட்டுமொத்தமாக வேண்டிக் கொள்ளும்போது, அந்த கூட்டு பிரார்த்தனைக்கு கட்டாயமாக ஒரு நல்ல பலன் கிடைக்கும். ஆக எம்பெருமானின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை உள்ளவர்கள், இன்றைய தினம் சுயநலமில்லாத வேண்டுதலை அந்த இறைவனிடம் வைக்க மறக்காதீர்கள்.

llingam

அடுத்தபடியாக இந்த பிரதோஷ காலத்தில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. சுயநலம் பாராமல், நாம் அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய உதவிக்கும் ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. உங்களுக்கு யாருக்கேனும் உதவி செய்யக்கூடிய சூழ்நிலை அமைந்தால், அதை தவிர்க்காமல் செய்து விடுங்கள். அந்த உதவியின் மூலம் உங்கள் பரம்பரைக்கே கோடி புண்ணியம் வந்து சேரும்.

vellam

உங்களுக்கு உதவி செய்யக் கூடிய சூழ்நிலை அமையாவிட்டால் என்ன செய்வது? வாயில்லா ஜீவன்களுக்கு, பச்சரிசியும் வெல்லமும் கலந்த கலவையையாவது சாப்பிட கொடுக்கவேண்டும். பச்சரிசியையும் வெல்லமும் கலந்த கலவையை கொஞ்சமாக உங்கள் வீட்டின் வெளியில் உள்ள இடங்களில் தூவி விடுங்கள். அதனை ஈ, எறும்புகள் வந்து சாப்பிட்டுக் கொள்ளும்.

உங்களுடைய வீட்டின் அருகில் பசு மாடு நாய் போன்ற வாயில்லா ஜீவன்கள், பறவைகள் இருந்தால் அவைகளுக்கு உங்களால் சாப்பிட முடிந்த பொருட்களைக் கொடுக்கலாம். சுயநலம் பார்க்காமல் செய்யக்கூடிய உதவியும், சுயநலமில்லாமல் வைக்கக்கூடிய வேண்டுதலுக்கும் எப்போதுமே முழுமையான பலனை உடனடியாக கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.