என்ன செய்தாலும் ரசமே வைக்க வரவில்லை என்பவர்கள் ‘சூப் போல் சூப்பரான ரசம்’ வைக்க இப்படி செய்து பாருங்கள்!

rasam-soru

சமையலில் விதவிதமான குழம்பு வகைகளை வைத்தாலும் ரசம் என்பது தனித்துவமானது. ரசத்தை ஊற்றி சாப்பிட்டால் தான் எந்த உணவு சாப்பிட்டு இருந்தாலும் நமக்கு ஜீரணமான திருப்தி தரும். இறுதியாக சாப்பிடும் ரசத்திற்கு மகத்துவமான தன்மைகள் உண்டு. நீங்கள் விருந்தே சாப்பிட்டாலும் இறுதியாக தயிரை விட, ரசத்தை ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். எளிதாக ஜீரணமாகி விட்டிருக்கும். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ரசத்தை செய்வதில் பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது.

rasam_1

எல்லா குழம்பும் அவ்வளவு அருமையாக செய்து விடுவேன். ஆனால் ரசம் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது என்று புலம்புபவர்கள் உண்டு. ரசம் என்றால் அதை அப்படியே ஸ்பூனால் எடுத்து சூப் போல் குடிக்கும் அளவிற்கு சுவையாக இருக்க வேண்டும். காரசாரமாக தொண்டையில் இறங்கி சளிக்கட்டு நீக்கி விட வேண்டும். இதுவல்லவோ ரசம்!! என்பது போல் அனைவரும் சப்புக் கொட்டி சாப்பிட வேண்டும். சாதாரண ரசத்தை விஷம் போல் வைப்பவர்களும் உங்களில் இருக்கத் தான் செய்வீர்கள். சூப் போல் குடிக்கும் ரசத்தை சூப்பராக எப்படி செய்வது? என்பதைத் தான் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

முதலில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து திப்பிகள் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்து எடுத்து வையுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் 11/2 டீஸ்பூன் – சீரகம், 1 டீஸ்பூன் – மிளகு, 1/4 டீஸ்பூன் – கடுகு, 2 – வர மிளகாய்கள் காம்புடன் போட்டு நரநரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். கடுகு சேர்த்து அரைத்தால் ரசத்தில் மேலே மிதந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கடுகின் சத்தும் நமக்கு கிடைக்கும். பின்னர் ஒரு முறை மூடியை திறந்து அதில் ஒரு 15 பல் – பூண்டு தோலுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

rasa-podi

பிறகு இரண்டு பழுத்த தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி இலைகளை காம்புடன் நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் இவ்வாறு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பாதி அளவு தக்காளி வதங்கி வரவும், கொத்தமல்லி தழைகள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சிறிதளவு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ளவற்றை கலந்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும்.

mysore-rasam

பச்சை வாசம் நீங்கியதும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள புளி கலவையை ஊற்றி நுரை வரும் வரை காத்திருக்க வேண்டும். ரசத்தை கொதிக்க வைத்து விட்டால் சுவை நன்றாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே நுரை எழும்பியதும் அடுப்பை அனைத்து விட்டு, தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை தாளித்து கொட்ட வேண்டும்.

mysore-rasam1

நீங்கள் பச்சையாக அப்படியே அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவை நன்றாக இருக்காது. இப்படி எண்ணெயில் வதக்கி விட்டு, பின்னர் ரசம் வைத்தால் ‘சூப்பரான சூப் ரசம்’ எளிதாக தயாராகிவிடும். இனி ரசம் செய்வதற்கு யோசிக்கவே யோசிக்காதீர்கள். பத்து நிமிடத்தில் பட்டுன்னு செஞ்சிடலாம்.

இதையும் படிக்கலாமே
கடைகளில் விற்கும் அதே சுவையில், சூப்பர் தட்டையை சுலபமாக எப்படி செய்வது? வீட்டில் இருக்கும் ரேஷன் பச்சரிசியிலும் இந்த தடையை செஞ்சிடலாம். சூப்பர் தட்டையை தட்ட யாருக்கும் தெரியாத சின்ன சின்ன டிப்சும் உங்களுக்காக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.