இந்த பொருள் இல்லாம கூட 10 நிமிஷத்துல சாம்பார் வெக்கலாமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

special-sambar1

சாம்பார் என்றாலே பாரம்பரிய உணவு வகைகளில் முன்னோடியாக இருக்கும் ஒரு குழம்பு வகை. சாம்பார் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாம்பாரை அதிகம் விரும்புவார்கள். சாம்பார் வகைகளில் நிறைய முறைகள் உள்ளன. அதிலும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் உண்டு. ஒரே சாம்பார் முறையே கூட ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். குழம்பு வகைகளில் சாம்பார் தான் ராஜா என்றே கூறலாம். சாம்பாருக்கு முக்கியமாக சில பொருட்கள் தேவைப்படும். அவற்றில் சில பொருட்கள் இல்லை என்றாலும் வித்தியாசமான முறையில் மிக மிக சுவையான சாம்பார், பத்து நிமிடத்தில் வைக்கலாம். பத்து நிமிடத்தில் எப்படி சாம்பார் வைப்பது? என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு விடையளிக்கும்.

special-sambar

இந்த சாம்பார், அரிசி சாதம் மட்டுமல்ல, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இந்த சாம்பாரை அதிகம் விரும்பி திரும்பத் திரும்ப கேட்பார்கள். ஒருமுறை செய்து பார்த்து அசத்தி விடுங்கள். இதற்கு தேவையான பொருட்களும் மிகக் குறைவான பொருட்கள் தான்.

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100g, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, குழம்பு பொடி – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தேங்காய் சில் – 4, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் – 150g.

vegitables

செய்முறை:
முதலில் துவரம்பருப்பை 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், மஞ்சள் தூள் இம்மூன்றையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். சாம்பாரில் போடுவதற்கு எந்த காயாக இருந்தாலும் பரவாயில்லை. முருங்கைக்காய், முள்ளங்கி, அவரைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். பின்னர் ஊற வைத்த துவரம் பருப்பை ஒரு கடாயில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பு வெந்ததும், நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள், இரண்டாக கீறி வைத்த நான்கு பச்சை மிளகாய்கள், தேர்ந்தெடுத்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக விடுங்கள்.

- Advertisement -

காய்கறிகள் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்த தேங்காயை அதில் ஊற்றவும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் குழம்பு மிளகாய்த் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் குழம்பு மசாலா பொடி இல்லை என்றால், கடையில் வாங்கும் சாம்பார் தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

sambar-veggies

குழம்பு கொதித்து பச்சை வாசம் போனதும் தாளித்தம் செய்ய வேண்டும். தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம். மற்ற பொருட்களை தாளித்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக கருக விட வேண்டும். வெங்காயம் கருகினால் தான் சாம்பார் மணக்கும். பின்னர் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கி விடுங்கள். அருமையான சாம்பார் சுலபமாக வைத்து விடலாம். மிகவும் வித்தியாசமாகவும், சுவையுடனும் இருக்கும் இந்த சாம்பாரை நீங்கள் ஒரு முறை வைத்து பாருங்கள். அதன் பிறகு அடிக்கடி உங்களை இந்த சாம்பார் சுண்டி இழுக்கும்.

இதையும் படிக்கலாமே
மீதமான சாதம் இருந்தா போதுமே! 2 நிமிஷத்துல பஞ்சு போல் இட்லி செஞ்சிடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Special sambar recipe in Tamil. Special sambar recipe. Village sambar in Tamil. Different types of sambar in Tamil. Sambar recipe home cooking.