இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அசைவ உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு தொக்கை தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி விழுது இவை அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த இறால் தொக்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
இறால் – கால் கிலோ, வெங்காயம் – 3, தக்காளி – 2, மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, எண்ணெய் – 7 ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லி – இரண்டு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் கால் கிலோ இறாலை தோல் நீக்கி, சுத்தம் செய்து, இரண்டு, மூன்று முறை தண்ணீரில் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் சிறிய துண்டு இஞ்சி மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லியை ஒன்றாக சேர்த்து சிறிய உரலில் வைத்து இடித்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 6 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு உரலில் வைத்து தட்டி வைத்துள்ள இஞ்சி, கொத்தமல்லி விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன்பின்னர் கால்கிலோ இறாலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இறால் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும். பிறகு மிளகாய் தூள் வாசனை சென்றதும் நன்றாக கெட்டியாக வந்ததும் இவற்றுடன் அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து, கலந்துவிட்டு இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இறால் தொக்கு தயாராகிவிடும்.