காலையில் அவித்த இட்லிகள் மாலையில் சிலர் பாலில் ஊற வைத்து சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் பெரும்பாலும் மீதமான இட்லிகளை குப்பையில் தான் கொட்டுவது உண்டு. அப்படி செய்யாமல் நாலு இட்லி இருந்தால் கூட ரொம்பவே சுலபமாக சட்டுனு பத்து நிமிடத்தில் சுவையான சில்லி இட்லி இப்படிக்கூட செய்து அசத்தலாம்! சுவையான சில்லி இட்லி எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
சில்லி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு, இட்லி – 4, கடுகு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெரிய தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள், மிளகு தூள் சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், சர்க்கரை – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
சில்லி இட்லி செய்முறை:
முதலில் சில்லி இட்லி செய்ய மீந்து போன இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். இதை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போக, வெங்காயம் கண்ணாடி பதம் வரை நன்கு வதங்கியதும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும்.
சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி மசிய வதக்கி விட வேண்டும். முக்கால் பாகம் நன்கு வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலா பொடி எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து பச்சை வாசனை போக வதக்கி விடுங்கள். பின்னர் உங்களிடம் டொமேடோ சாஸ் இருந்தால் அதை ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் கால் ஸ்பூன் சர்க்கரை இனிப்பிற்காக சேர்த்துக் கொள்ளுங்கள்.
இனிப்பு சேர்க்க விருப்பம் இல்லை என்றால் இதனை தவிர்த்து விடலாம். பின்னர் நீங்கள் எண்ணெயில் வறுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இட்லி துண்டுகளுக்குள் மசாலா ஊறி வர கலந்து விட்ட பின்பு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை அப்படியே மேலே தூவி நீர் வற்றியதும் அடுப்பை அணைத்து சுட சுட தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக மீந்து போன இட்லி துண்டுகளை வீணாக்காமல் இப்படி சில்லி இட்லியாக செய்து நீங்களும் அசத்தலாம்.