பன் தோசை எல்லாரும் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா மும்பை ஸ்டைலில் இந்த இன்ஸ்டன்ட் ஸ்டஃப்டு பன் தோசையை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இனி பன் தோசைன்னாலே இது தான் ஞாபகத்துக்கு வரும்.

bun dosai
- Advertisement -

தோசை என்று சொன்னாலே நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். என்ன தான் தினமும் சாப்பிடும் உணவாக இருந்தாலும் சலித்துப் போகாத உணவுகளில் இதுவும் ஒன்று. அந்த வகையில் இப்போதெல்லாம் பல வகையான தோசைகள் வந்து விட்டது. இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ஒரு அருமையான ஸ்டஃப்டு பன் தோசை ரெசிபி அதுவும் மும்பை ஸ்டைலில் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த தோசை செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் வெள்ளை அவல், அரைக் கப் ரவை, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் கால் கப் தயிர், கால் கப் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பவுலில் ஊற்றி இந்த மாவிற்கு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மேலும் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இது ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊறட்டும் இந்த நேரத்தில் இந்த தோசைக்கான ஸ்டம்பிங்கை தயார் செய்து விடுவோம்.

- Advertisement -

இதற்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதன் பிறகு ஒரு பச்சை மிளகாயை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து பிறகு கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு கேரட்டை துருவி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்த பிறகு நாம் மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கொஞ்சமாக கொத்தமல்லி நறுக்கி இதில் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கலந்து விட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இதற்குள்ளாக மாவு நன்றாக ஊறி இருக்கும். இப்போது மேலும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை கரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கால் டீஸ்பூன் ஆப்ப சோடா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை இன்னும் உப்பலாக கிடைக்கும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து தயார் செய்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து கல் தோசை போன்ற அளவில் அதிக தடிமனாக இல்லாமல் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து கையில் வடை போல தட்டி அதை நீங்கள் ஊற்றி இருக்கும் தோசை மீது வைத்து அதன் பிறகு மேலும் ஒரு அரை கரண்டி மாவை எடுத்து இந்த தோசையின் மீது ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி விடுங்கள். இந்த தோசை ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு அந்தப் பக்கமும் சிவந்து வந்த பிறகு தோசை எடுத்து விடுங்கள்.

நல்ல சுவையான ஸ்டஃப்டு மும்பை ஸ்பெஷல் பன் தோசை தயார். இந்த தோசை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இதை அப்படியே கூட சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி புதினா சட்னி போன்றவற்றுடன் சாப்பிடும் போது இதன் சுவை இன்னுமே அதிகமாக இருக்கும். மும்பையில் பிரபலமான இந்த ஸ்டஃப்டு பன்தோசை ரெசிபியை நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

- Advertisement -