சில பேர் வாழ்க்கையில் சுமையை மட்டும் தான் சுமந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சுகமான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை என்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியாது. மேலும் மேலும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். புதியதாக எந்த முயற்சியை செய்தாலும் அதில் அவர்களுக்கு தடை வந்து தடங்கல் செய்யும். வியாபாரத்தில் தடை, வேலைக்கு செல்வதில் தடை, பணம் கைநீட்டி கடன் வாங்கினாலும் பிரச்சனை, கடனாக கொடுத்தாலும் பிரச்சனை, மேல் படிப்பு படிப்பதில் பிரச்சனை, இப்படி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு படி கால் எடுத்து வைத்தாலே பிரச்சனைகள் தான். இப்படிப்பட்ட சுமையான வாழ்க்கையை கூட சந்தோஷமாக மாற்றக்கூடிய சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சுகபோக வாழ்க்கையை தரும் சோம்பு:
இந்த பரிகாரத்தை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளக்கூடாது. உங்கள் கணவருக்காக நீங்கள் செய்யலாம். அல்லது மனைவியின் முன்னேற்றத்திற்காக, கணவர் செய்யலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக தாய் தந்தையர் இதை செய்யலாம். அடுத்தவர்கள் சுகமாக வாழ வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை செய்ய செவ்வாய்க்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை துணி எடுத்து, அதை மஞ்சளில் நனைத்து நிழலிலேயே காய வைத்து மஞ்சள் துணி தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் அளவு சோம்பு வைக்க வேண்டும். சோம்பு வீட்டில் சமையலுக்கு பயன்படுத்திய பழைய சோம்பாக இருக்கக் கூடாது. கடையிலிருந்து வாங்கிய புது சோம்பை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மஞ்சள் துணியில் சோம்பு சிறிதளவு வைத்து, இதை மஞ்சள் நூலிலேயே முடிச்சாக கட்டி, உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாருக்காக இந்த முடிச்சை தயார் செய்தீர்களோ அதாவது உதாரணத்திற்கு உங்கள் கணவர் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ‘என் கணவர் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் தொழிலில் வரக்கூடிய தடுமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சக்தியை இந்த பிரபஞ்சம் அவருக்கு கொடுக்க வேண்டும்.’ இப்படி நேர்மறையான வார்த்தைகளை சொல்லி முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு, இந்த முடிச்சை யார் கண்ணுக்கும் தெரியாமல் எடுத்து வைத்து விடுங்கள்.
முருகர் சுவாமி படம் இருக்கும் அல்லவா, அதன் பின்னால் இந்த முடிச்சை வைத்தாலும் அது அப்படியே இருக்கும். இந்த பரிகாரத்தை செய்து மூன்று மாதங்களில் உங்களுடைய கணவரின் முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் தெரியும். இதே போல பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் வேலை என்று உங்களுக்கு எந்த கோரிக்கையை வைக்க வேண்டுமோ, அந்த கோரிக்கைக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் கோரிக்கை ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். பல விதமான வேண்டுதலை வைத்து குழப்பக் கூடாது.
மூன்று மாதம் கழித்து பழைய சோம்பு எடுத்து கால் படாத செடி கொடிகளுக்கு அடியில் போட்டு விடுங்கள். பரிகாரத்தை செய்த பின்பு உங்களுக்கு மனநிறைவு இருக்கிறது, வேண்டுதலுக்கான பலன் கிடைத்தது என்ற நம்பிக்கை இருந்தால் மீண்டும் இதே போல சோம்பு முடிச்சை முருக பெருமானை வேண்டி கட்டி வைத்துக்கொள்ளலாம். வேறு ஒரு வேண்டுதலுக்காகவும் இந்த பரிகாரத்தை மீண்டும் செய்யலாம். அல்லது கணவரின் முன்னேற்றம் இன்னும் இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காக இரண்டாவது முறை இந்த பரிகாரத்தை செய்வதில் தவறு கிடையாது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.