ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். எந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய நாளில் அந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய பணத்தை பெறுவதற்கும், ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு அவருக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று அவரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்ர அருள் பரிபூரணமாக கிடைக்க
ஒருவருக்கு சுக்கிர பகவானின் அருள் கிடைத்துவிட்டால் அவருக்கு எந்தவித கஷ்டமும் இருக்காது. சுகபோகமான வாழ்க்கையை வாழ்வார்கள். எந்த ஒரு விஷயம் வேண்டும் என்று நினைத்தாலும் உடனே கிடைத்துவிடும். அப்படிப்பட்ட பாக்கியத்தை தரக்கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதனால் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலமும் நமக்கு சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் சுக்கிர பகவானுக்கு என்று சிறப்பான தீப வழிபாட்டு முறையும் இருக்கிறது. அந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளும் நீங்கும் அதே சமயம் சுக்கிர பகவானின் அருளும் கிடைக்கும். அதைப்பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
சுக்கிர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் சுக்கிர பகவானுக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக சுக்கிர பகவானுக்குரிய ஹோரையில் வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை என்பது காலையிலும் மதியத்திலும் இரவிலும் வரும். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரைக்கு அதிக அளவில் பலன் இருக்கிறதாம். இந்த இரவு நேர சுக்கிர ஹோரை என்பது 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரும். அந்த நேரத்தில்தான் நாம் இந்த ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுக்கிர பகவானுக்குரிய தானியமான மொச்சையையும் பச்சரிசியையும் கலந்து வைக்க வேண்டும். அதற்கு நடுவே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அந்த நாணயத்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்தமான கற்கண்டை 7 எண்ணிக்கையில் அந்த அகல் விளக்கில் சேர்த்து பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். உங்களுக்கு சுக்கிர பகவானின் மந்திரம் தெரியும் என்ற பட்சத்தில் அந்த மந்திரத்தை கூறலாம் அல்லது மகாலட்சுமி தாயாருடைய மந்திரத்தையோ ஸ்லோகத்தையோ அந்த தீபத்தை பார்த்தவாறு கூறலாம்.
இந்த தீபம் குறைந்தபட்சம் 48 நிமிடங்கள் எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துவிடலாம். மறுநாள் காலையில் இந்த பச்சரிசியையும் மொச்சையையும் பசுமாட்டிற்கு அல்லது பறவைகளுக்கும் தானமாக தர வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நாம் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து சனிக்கிழமை அன்று பசு மாட்டிற்கு பச்சரிசியும் மொச்சையையும் தானமாக தருவதன் மூலம் சுக்கிர பகவானின் அருளோடு சனீஸ்வர பகவானின் அருள் கிடைக்கும். நம்முடைய கர்ம வினைகளும் குறையும். அதன் மூலம் நமக்கு நன்மைகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி, எதிரி தொல்லை நீங்க விளக்கு பரிகாரம்
எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டின் முழுமையான பலன் என்பது நம்முடைய கர்ம வினைகளை குறைப்பது தான். அப்படி நம்முடைய கர்ம வினைகள் குறைந்துவிட்டால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் நமக்கு உண்டாகும். அந்த வகையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி நம்முடைய கர்ம வினைகளை தீர்த்து சுகபோகமான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.