தீபாவளி நோன்பில் பலரும் பலவகையான பலகாரங்களை செய்வார்கள். அதிரசம் முறுக்கு தட்டை சீடை என்று அதில் இந்த சுகியமும் முக்கியமான ஒரு பலகாரம். இந்த சுகியம் மற்ற அனைத்தையும் விட சீக்கிரமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய ஒரு பலகாரம் தான் ஆனால் இதில் அந்த சுகியத்திற்கான பூரண பக்குவம் சிலருக்கு சரியாக வராது. எப்படி செய்தாலும் பூரணம் தண்ணியாகி உருண்டை பிடித்து போட வராது. அப்படியெல்லாம் இல்லாமல் இந்த நோம்பில் சுழியத்தை அருமையாக செய்து வைத்து வழிபடலாம். ஈசியான முறையில் இந்த சுழியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 100 கிராம், வெல்லம் -100 கிராம், மைதா – 1/2 கப், தேங்காய் துருவியது – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் -1/4 டீஸ்பூன், சுக்கு – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, எண்ணெய் – 250 கிராம்.
சுகியம் செய்வதற்கு முன்பு கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊற வைத்த பருப்பை நன்றாக அலசி குக்கரில் சேர்த்து பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நான்கு விசில் வரை வைத்து பிறகு குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடுங்கள். இது அப்படியே ஒரு பக்கம் இருக்கட்டும்.
இப்போது சுகியத்திற்கு தேவையான பூரணத்தை தயார் செய்ய, அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெல்லத்தை நன்றாக நுணுக்கி போட்ட பிறகு கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்த உடன் கொஞ்சம் சுக்கும், ஏலக்காயும் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கலந்த பிறகு துருவிய தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். தேங்காய் சேர்த்த பிறகு அதிகமாக கொதிக்க வேண்டாம்.
இதற்குள்ளாக இறக்கி வைத்த பருப்பு குக்கர் விசில் இறங்கி இருக்கும். அதிலிருந்து பருப்பை எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் வெல்லம் தேங்காய் கலவையில் சேர்த்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் சேர்ந்து நல்ல ஒரு கெட்டியான பதம் வரும் வரை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டிருங்கள். ஒரு ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வரை கிண்டினால் இந்த பதம் உங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இது சூடு ஆறிய பிறகு இந்த பூரணத்தை பிரிட்ஜில் ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
இப்போது சுகியத்திற்கு மேல் மாவு தயார் செய்து கொள்ளலாம். மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு மீதம் இருக்கும் ஏலக்காய், சுக்கு, மஞ்சள் தூள், நெய் அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு இடையே ஃப்ரிட்ஜில் வைத்து ஆற வைத்த நன்றாக இறுகி இருக்கும். அதை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உருட்டி வைத்த பூரண உருண்டையை தயார் செய்து வைத்த மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும்.எண்ணெய் நல்ல சூடாக இருந்தால் தான் நீங்கள் போட்டவுடன் இந்த சுகியம் அடியில் தங்காமல் மேலே எழும்பி வரும் இல்லையென்றால் அடியில் தங்கி கடாயில் ஒட்டிக்கொண்டு சுகியம் உடைந்து வெல்லம் வெளியில் வந்து விடும். இப்படி எண்ணெய் காய்ந்ததும் இதை போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான் சுகியம் தயார்.
இதையும் படிக்கலாமே: 1 கப் ரவை இருந்தா போதும் சூப்பரான குழிப்பணியாரம் இப்படியும் செய்யலாமே! ருசி மிகுந்த ரவை கார குழிப்பணியாரம் தயாரிப்பது எப்படி?
இதில் முக்கியமான குறிப்புகள்: (பூரணம் கெட்டி ஆகும் வரை அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும். அடுத்து அரை மணி நேரம் இதை பிரிஜ்ஜில் வைக்க வேண்டும். மைதா மாவு கறைக்கும் பதம், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் சுகியம் போடா வேண்டும்)