பாரம்பரிய முறைப்படி ஒரு முறை சுண்டைக்காய் குழம்பு இப்படி வெச்சு பாருங்க! ஒரு குண்டான் சாதம் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் சாப்பிடத் தோணும்.

sundaikai-kuzhambu
- Advertisement -

பொதுவாகவே சில பேருக்கு சுடச்சுட சாதத்தில் குழம்பு போட்டு சாப்பிடுவதாக இருந்தால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழம்பு பிரியர்களுக்காக இன்றைக்கு பாரம்பரிய முறையில் பச்சை சுண்டைக்காய் குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சுண்டைக்காய் குழம்பு வைத்து விட்டு தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். ஒரு குண்டான் சோறு இருந்தாலும் நமக்கு அது பத்தாது. சரி ரெசிபியை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

sundaikai-kuzhambu1

முதலில் பச்சை சுண்டைக்காய்களை காம்புகளில் இருந்து நீக்கி, தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சுண்டைக் காய்களை சிறிய உரலில் போட்டு ஒரு தட்டு தட்டினால் நசுங்கும். நசுக்கியும் சுண்டைக்காய் குழம்பு வைக்கலாம். அப்படி இல்லை என்றால் இந்த சுண்டைக்காய்களை கத்தியில் இரண்டாக வெட்டியும் சுண்டைக்காய் குழம்பு வைக்கலாம். அது உங்கள் விருப்பம்.

- Advertisement -

நறுக்கிய அல்லது இடித்து இந்த சுண்டைக் காய்களை மோர் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் அப்படியே போட்டு வையுங்கள். வெறும் தண்ணீரில் போட்டு வைத்தால் அது கருப்பாக மாறிவிடும். குழம்புக்கு தயாராக இருக்கும் சுண்டைக் காய்களை அப்படியே இருக்கட்டும்.

puli-karaisal

ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளிக் கரைசலையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குழம்பு தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும், 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெயில் செய்தால்தான் இந்த குழம்பு சுவையாக இருக்கும். அந்த எண்ணெயில் கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். (வெங்காயம் வடகம் இருந்தால் அதையும் தாளித்து கொள்ளலாம்).

sundaikai-kuzhambu2

அடுத்தபடியாக தோலுரித்த சின்ன வெங்காயம் – 20, தோலுரித்த பூண்டு – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வெங்காயம் பூண்டு சுருங்கி வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பச்சை வாடை நீங்கி சுருங்கி வந்ததும் தயாராக இருக்கும் பச்சை சுண்டைக்காய்களை எடுத்து கடாயில் போட்டு எண்ணெயில் கட்டாயம் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

sundaikai-kuzhambu4

சுண்டைக் காய்கள் நன்றாக எண்ணெயில் வழங்கினால் தான் கசப்புத்தன்மை இருக்காது. சுண்டைக்காய் நன்றாக வதங்கிய பின்பு தான் தக்காளி பழங்களை சேர்க்கவேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் 2 தக்காளி பழங்களை வெட்டி கடாயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

sundaikai-kuzhambu3

தக்காளி வதங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து ஒருமுறை கடாயில் இருக்கும் பொருட்களோடு வதக்கி விடுங்கள். சேர்த்திருக்கும் மிளகாய்பொடி எக்காரணத்தைக் கொண்டும் எண்ணெயில் கருதிவிடக்கூடாது. அடுத்தப்படியாக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை கடாயில் ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு குழம்பை 10 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். புளியின் பச்சை வாடை முழுவதும் நீங்கி, சுண்டை காய்கள் வெந்து, குழம்பு திக்காக மாறி அதில் இருக்கும் எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும்.

sundaikai-kuzhambu5

இறுதியாக இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலிலிருந்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து அந்த பாலை, இந்த சுண்டைக்காய் குழம்பில் சேர்த்து 2 நிமிடம் போல கொதிக்க விட்டு அதன் பின்பு பரிமாறலாம். உங்களுக்கு ஒருவேளை தேங்காய் பால் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால் அப்படியேவும் இந்த குழம்பை அப்படியேவும் சாப்பிடலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு வெல்லத்தை இந்த குழம்போடு இறுதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

sundaikai-kuzhambu6

இப்படி மட்டும் சுண்டைக்காய் குழம்பு வைத்தால் கட்டாயமாக குழம்பில் கசப்பு இருக்காது. அருமையான சுவை கிடைக்கும். உங்கள் வீட்டில் குழம்பு மிளகாய் தூள் இல்லை என்றால் சாம்பார் பொடி சேர்க்கலாம். அப்படி சாம்பார் பொடியும் இல்லை என்றால் மிளகாய்தூள், தனியாத்தூள், சேர்த்து இந்த குழம்பை வைக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -