அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பொழுதும், அல்லது வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் நேரம் குறைவாக இருந்தாலும் இந்த குழம்பை உடனே செய்து விடலாம். அதிலும் இதனை செய்ய காய்கறிகள் கூட தேவை இல்லை. வீட்டில் இருக்கும் தக்காளி, வெங்காயம் மட்டும் போதும். இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் விதவிதமான உணவுகளை பார்த்து பார்த்து சமைக்கிறோம். ஆனால் வேலை குறைவாகவும், அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்காமலும் ஒருமுறை இப்படி சுலபமான அவசர குழம்பை செய்து பாருங்கள். இந்த குழம்பின் மணமும், வாசமும் நாவில் நீர் ஊறும் அளவிற்கு சூப்பராக இருக்கும். வாருங்கள் இந்த தண்ணி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 4, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 5, எண்ணெய் – 7 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து, சுத்தமாக கழுவிக் கொண்டு, அதனை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்த பின்னர் பொடியாக நறுக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் ஒவ்வொன்றையும் இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி பழங்களையும் சிறு துண்டுகளாக அரிந்து வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஏழு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இவை நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களையும் சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து எண்ணெயிலேயே 2 நிமிடம் வதக்கி விட்டு, பின்னர் இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி ஐந்திலிருந்து பத்து நிமிடம் குழம்பை நன்றாகக் கொதிக்க விடவேண்டும். பிறகு மூடியை திறந்து ஒரு கொத்து கொத்தமல்லி தழையை தூவி கலந்து விட்டால் சுவையான தண்ணீர் குழம்பு தயாராகிவிடும். இந்த குழம்பை ஒருமுறை சாதத்துடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.