பங்குனி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இன்னும் சித்திரை மாதம் பிறந்து விட்டால் போதும். சொல்ல வேண்டியதே இல்லை. கட்டுக்கடங்காத வெப்பம் வீசத் தொடங்கும். அனலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது போன்ற நாட்களில் வெளியில் சென்று வருபவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கூட உடல் சூடு அதிகமாகி விடும். இதனால் வயிற்றுவலி, அஜீரணம், நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகள் உடலில் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றை சரிசெய்ய மாத்திரைகளைப் பயன்படுத்தினால் அவை இன்னும் நமது உடல் சூட்டை அதிகரிக்குமே தவிர பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால், இது போன்ற உடல் உபாதைகளில் இருந்து விடுபட முடியும். அப்படி நீர் காயான சுரைக்காயில் சுவையான ஒரு கிரேவியை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்– 1, வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு – 4 பல், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும், பிறகு இதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு பல் பூண்டை சிறிய உரலில் வைத்து இடித்து வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு தட்டி வைத்துள்ள நான்கு பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர் வெட்டி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, அதனுடன் மக்கள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இதனுடன் தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. சுரைக்காயில் நீர் அதிகமாக இருப்பதால் இதனை தட்டு போட்டு மூடி வைத்தால் போதும் நன்றாக வெந்துவிடும்.
சுரைக்காய் முக்கால் பங்கு வெந்தவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, 5 இலிருந்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான சுரைக்காய் கிரேவி தயாராகிவிடும்.