காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க சுரைக்காய் பொரியல் ரெசிபி எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.
சுரைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ரெண்டு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி, வரமிளகாய் – 3, பூண்டு பல் – நான்கு.
சுரைக்காய் பொரியல் செய்முறை விளக்கம்:
சுரைக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதன் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளே விதைகள் கடினமாக இருந்தால் நீக்கி விடுங்கள், இல்லை என்றால் அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் காரத்திற்கு மூன்று வர மிளகாய் மற்றும் நான்கு பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வர வதக்கி விட வேண்டும். பொன்னிறமாக வெங்காயம் வதங்கி வரும் பொழுது நீங்கள் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து ரெண்டு நிமிடம் வதக்கி மூடி வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பெண்களின் அரிசி என்று சொல்லப்படும் இந்த அரிசியை பற்றி உங்களுக்கு தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களை கொடுக்கும் தோசை ரெசிப்பி இதோ உங்களுக்காக.
சுரைக்காய் நீர் காய் என்பதால் மூடி வைத்தாலே போதும் தண்ணீர் தெளிக்க தேவையில்லை அதுவே தண்ணீர் விடும். எட்டில் இருந்து பத்து நிமிடத்திற்குள் சுரைக்காய் நன்கு வெந்துவிடும். அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பவுடரை சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.