கொத்தமல்லி தொக்கு செய்முறை

kothamalli thokku
- Advertisement -

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை நீண்ட நாட்கள் நம்மால் வைத்து உபயோகப்படுத்த முடியாது. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கொத்தமல்லி. கொத்தமல்லியில் பல சத்துக்கள் இருந்தாலும் அதை ஒரு முறை அதை வாங்கி விட்டால் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். பிறகு அதன் தன்மை மாறி விடுவதால் நம்மால் சமையலுக்கு உபயோகப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட கொத்தமல்லியை எந்த முறையில் தொக்கு செய்து பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் ஆனாலும் உபயோகப்படுத்த முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கொத்தமல்லி இலையில் விட்டமின் கே, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதோடு மட்டுமின்றி நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த வெள்ளை அணுக்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ரத்த சர்க்கரையின் அளவு சீராகிறது. கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. குடல், சருமம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • வெங்காயம் – 3
  • கடுகு – 1 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் கொத்தமல்லியை வேரை மட்டும் நீக்கிவிட்டு சுத்தமாக கழுவி தண்ணீர் வடிய வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, வெந்தயம் இவை இரண்டையும் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வறுபட்ட பிறகு இதை அப்படியே தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்து ஆற வைத்து கொரகொரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். பிறகு இதனுடன் புளி சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இது நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை அதில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளர வேண்டும்.

இரண்டு நிமிடம் நன்றாக கலந்த பிறகு நாம் ஏற்கனவே பொடித்து வைத்திருக்கும் கடுகு வெந்தய பொடியை அதனுடன் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணையை மறுபடியும் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும். எண்ணெய் தனியாக பிரியும் வரை இதை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என்று அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் இட்லி மாவு அரைக்கும் முறை
பல அற்புதமான மருத்துவ குணம் கொண்ட கொத்தமல்லியை வாங்கி வந்து வீணாகாமல் இந்த முறையில் தொக்கு செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவோம்.

- Advertisement -