சமையலில் கூடுதல் சுவை சேர்க்கும் அட்டகாசமான 10 குறிப்புகள்! இது தெரிஞ்சா நீங்களும் சமையல் கில்லாடி தான்.

puliyotharai-idli
- Advertisement -

எப்பொழுதும் சமையல் செய்யும் பொழுது ஒரு புன்னகையுடனும், ஆர்வத்துடனும் செய்வது அந்த சமையலில் ருசியை அதிகரிக்குமாம். அது போல சிறு சிறு விஷயங்கள் மூலம் சாதாரணமாக இருக்கும் சமையலை ருசியான சமையலாகவும் மாற்றிக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு சூப்பரான மற்றும் அட்டகாசமான இந்த 10 குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொண்டால் உங்களுடைய சமையலும் ருசி அதிகரிக்கும். சமையல் குறிப்புகள் பத்து உங்களுக்காக இதோ!

குறிப்பு 1:
லெமன் சாதம் மற்றும் புளி சாதம் செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்க பூண்டு, வெந்தயம், பெருங்காய கட்டி, நிலக்கடலை, வர மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு நல்லெண்ணெயில் லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக கொரகொரவென்று பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாதத்துடன் சேர்த்து சமைத்துப் பார்த்தால் ருசி அபாரமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
மீன் வறுவல் செய்யும் பொழுது அதிலிருந்து மசாலா உதிர்ந்து வந்தால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மசாலாவுடன் கலந்து ஒரு முறை செய்து பாருங்கள்! மசாலா உதிராமல் நல்ல சுவையுடன் பொன்னிறமாக பொரிந்து வரும்.

குறிப்பு 3:
சமையலில் தக்காளி அதிகம் சேர்ப்பவர்கள் அதில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு சேர்ப்பது நல்லது. தக்காளியின் விதைகள் சிறுநீரக கற்களை உருவாக்கும் தன்மை கொண்டது எனவே உங்களால் முடிந்த வரைக்கும் விதைகள் மற்றும் தண்டு பகுதியை நீக்கி விட்டு தக்காளியை சமையுங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
இளநரை இருப்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி பெரிய நெல்லிக்காயை சாப்பிட்டு வர வேண்டும். விலை உயர்ந்த பழங்களை காட்டிலும் ஒரு நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்கள் உண்டு. இதை தினமும் ஒருவர் சாப்பிட்டு வர அவர்கள் அடிக்கடி டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

குறிப்பு 5:
கறி குழம்பு வைக்கும் போது கடுகு சேர்ப்பதை விட சோம்பு சேர்த்து செய்து பாருங்கள், சுவை சூப்பராக இருக்கும். மேலும் கறி மசாலா செய்யும் பொழுது முந்திரி பருப்புகளையும் அரைத்து சேருங்கள். கறி குழம்பில் தேங்காய் அரைத்து ஊற்றும் பொழுது கசகசா அதிகம் சேர்த்து அரைத்து செய்யுங்கள் ருசியாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
கீரை பச்சையாக கடைய சின்ன வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மட்டும் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் விட்டு எடுத்து கடைந்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதற்கு கடுகு, வடவம் தாளித்து பாருங்கள், இன்னும் டேஸ்டாக இருக்கும்.

குறிப்பு 7:
பொதுவாக இட்லிக்கு மாவு அரைக்கும் போது நாளில் ஒரு பங்கு உளுந்து சேர்ப்பது வழக்கம் ஆனால் இட்லி பஞ்சு போல மிருதுவாக வருவதற்கு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்து அரைத்து பாருங்கள். மேலும் இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு வெள்ளை அவல் ஊற வைத்து சேருங்கள். குஷ்பூ இட்லி நொடியில் ரெடி ஆகும்!

குறிப்பு 8:
பூரி சமைப்பவர்கள் பூரியை கட்டையில் வைத்து தேய்க்கும் பொழுது எண்ணெய் பயன்படுத்த வேண்டும். கோதுமை மாவு பயன்படுத்தக் கூடாது. இதனால் நீங்கள் பூரி பொறித்தெடுக்கும் பொழுது எண்ணெய் வீணாகாமல் இருக்கும். மேலும் பூரி மாவு பிசையும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால் ரொம்ப நேரம் பூரி உப்பலாகவே இருக்கும்.

குறிப்பு 9:
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரைவேக்காடாக வேக வைத்து எடுத்த கருணைக்கிழங்கு துண்டுகளை பிரட்டி அரை மணி நேரம் ஊற விட்டு பின்னர் தோசைக்கல்லில் இரண்டு புறமும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்தால் சூப்பரான கருணைக்கிழங்கு ப்ரை தயார்!

குறிப்பு 10:
நிறைய அப்பளங்கள் சுட்டு வைத்து நமத்து போய்விட்டதா? நமத்து போன அப்பளங்களை வாணலியில் லேசாக வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய், புளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்தால் அப்பள துவையல் ரெடி!

- Advertisement -