1 கப் ரவை இருந்தா போதும் 5 நிமிடத்தில் சுவையான ரவா புட்டு இப்படிக்கூட செய்யலாமே!

rava-puttu-recipe
- Advertisement -

ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பிட தோன்றும். அரிசி மாவு புட்டு செய்வது போலவே செய்யக்கூடிய இந்த ரவா புட்டு அனைவரையும் கவரும் வண்ணம் சுவையைக் கொடுக்கும். ஐந்து நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஆக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய இந்த ரவா புட்டு நாம் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ரவா புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், முந்திரி பருப்பு – 10, நெய் – தேவைக்கு ஏற்ப, ஏலக்காய் – 2, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ரவா புட்டு செய்முறை விளக்கம்:
ரவா புட்டு செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு ரவையை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இந்த ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். ரவையின் நிறம் மாறி விடக் கூடாது. ஆனால் கிரிஸ்பியாக மொறுவென்று வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஈரமாக்கி கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது. கைகளில் எடுத்து உருண்டை பிடித்தால் பிடிபட வேண்டும். அதே போல உதிர்த்தால் உதிர்ந்து விட வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் போதும். பின்னர் ரவையை ஒரு சல்லடையில் சலிக்க வேண்டும். அப்போது தான் ஆங்காங்கே கட்டி தட்டாமல் இருக்கும். கட்டிகளாக இருக்கும் ரவையை உடைத்து விட்டு மொத்தமாக சலித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் சலித்த இந்த ரவையை ஒரு இட்லி பாத்திரத்தில் வெள்ளை துணியை விரித்து அதன் மீது வைத்து 5 இலிருந்து 7 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் போதும், ரவை நன்கு வெந்து வந்திருக்கும். வேக வைத்துள்ள ரவையை கைகளால் உதிர்த்து விட்டு அதனுடன் நீங்கள் அரை கப் அளவிற்கு தேங்காயை துருவி சேர்க்க வேண்டும். பின்னர் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வாசனைக்கு ஏலக்காய்களை உரலில் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவில் நெய் விட்டு முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த முந்திரிகளை இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் அபாரமான ருசியாக இருக்கும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த ரவா புட்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ரொம்பவே சுவை தரக்கூடிய இந்த ரவா புட்டு இதே முறையில் இதே அளவில் நீங்களும் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாமே!

- Advertisement -