தாலி கயிறு மாற்றும் முறை

Thali chain

ஒரு பெண்ணிற்கு முக்கியமானது அவள் திருமாங்கல்யம். நல்ல முகூர்த்தத்தில், பந்தக்கால் வைத்து, ஹோமம் வளர்த்து, பல மந்திரங்கள் சொல்லி, மேளதாளத்தோடு, பெரியோர்களின் ஆசியோடு, அந்த இறைவனின் ஆசியோடு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டப்படுகின்றது. ஒரு பெண் தன் தாலியை பொக்கிஷமாகவே கருதுகின்றாள். சிலர் தாலிக்கொடியை மஞ்சள் சரட்டில் அணிபவரும் உள்ளனர். தங்கச்சரடில் அணிபவரும் உள்ளனர்.  தாலிக்கொடியை மஞ்சள் சரடில் போட்டு இருப்பவர்களுக்கு, அதனை எப்போது எப்படி மாற்றுவது. எந்த கிழமையில் மாற்றுவது. எங்கு வைத்து மாற்றிக்கொள்ளலாம். இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போமா?

Thali Mangalyam

தாலிக்கயிற்றை நாம் அடிக்கடி மாற்றக்கூடாது. கயிறு பழுதாகி மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதனை மாற்ற வேண்டும். பொதுவாக தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவு மதிப்பு மிக்க தாலிக்கயிற்றை நாம் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்றவேண்டும். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று கூறுகின்றனர். ஆனால் திருமாங்கல்யத்தை வெள்ளிக்கிழமைகளில் மாற்றக்கூடாது. அது சிறந்தது அல்ல.

திருமாங்கல்யத்தை மாற்றும் போது மற்றவர் யாரும் பார்க்கக்கூடாது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. மற்றவர்கள் துணையில்லாமல் அவரவர்களுக்கு அவரவர் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். பெற்ற தாய் கூட பார்க்க கூடாது என்பது தான் உண்மை. பழக்கம் இல்லாதவர்கள் அம்மாவின் துணைகொண்டு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் விரைவில் பழகிக்கொண்டு தனியாகவே மாற்றிக் கொள்வது சிறப்பானது.

Thali Mangalyam

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவரது தாலிக்கயிற்றையோ அல்லது தங்கத்தால் உள்ள தாலி சரடையோ மாற்றக்கூடாது. அந்த காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  பெண்கள் தினமும் அந்த தாலி கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்கள். (இன்றும் அது பழக்கத்தில் தான் உள்ளது.) திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் அந்த மஞ்சள் பூசிய தாலிக்கயிறு, அந்த தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் அண்ட விடாமல் தவிர்த்தது. ஆனால் இன்று காலம் சற்று அதனை மாற்றி விட்டது. அன்று போல் பெண்களின் கழுத்தில் மஞ்சள் தேய்த்த தாலிக்கயிறு இல்லாததால் பலருக்கும் மார்பகம் சார்ந்த நோய் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இது அறிவியல் சார்ந்த உண்மை. தாலியை மஞ்சள் கயிற்றில் அணியலாமா. தங்கச் சரடில் அணியலாமா என்று கேட்டால், அறிவியல் சார்பாக மஞ்சள் கயிற்றில் அணிவது தான் சிறந்தது. மற்றபடி அவரவர் வீட்டு வழக்கப்படி முடிவு எடுப்பது நல்லது.

- Advertisement -

அனைவரும் பொதுவாக தாலிக்கயிற்றை மாற்றும் நாள் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று தான். ஆடிப்பெருக்கு அன்று எந்தவிதமான நாள் நட்சத்திரம் கிழமைகளையும் பார்க்காமல் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். புதியதாக திருமணம் ஆனவர்கள் ஆடி 18 அன்று தாலியை மாற்றிக் கொள்வது சிறப்பு.

கயிறு மாற்றும் முறை

16 திரிகளை கொண்டது தான் ஒரு திருமாங்கல்யக்கயிறு.
நாம் திருமாங்கல்யத்தை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது. பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, நம் கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிற்றை கழட்டாமல், முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து,  அதில் உள்ள குண்டுகளை மட்டும் எடுத்து, புது தாலி கயிற்றில் கோர்த்து, அதனை கழுத்தில் போட்ட பின்பு தான், பழைய கயிற்றை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். கழட்டிய பழைய கயிற்றை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் சேர்த்து விடலாம். திருமாங்கல்யத்தில் அனைத்து குண்டுகளையும் கோர்த்து விட்ட பின்பு, நீங்கள் இடும் முடிச்சானது இடது நெஞ்சு பக்கத்தில் தான் இருக்க வேண்டும்.

thali kayiru

ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீரை கரைத்து வைத்துக் கொண்டு உங்கள் கழுத்தில் கட்டிய திருமாங்கல்யக் குண்டுகளை ஏழு அல்லது ஒன்பது முறை அதில் தோய்த்து எடுக்கவேண்டும். அதன் பின்பு பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு உங்கள் திருமாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பொட்டை வைத்துக் கொள்ளும் போது காயத்ரி மந்திரம் கூறுவது இன்னும் சிறப்பு. திருமாங்கல்யத்தை மாற்றியதினத்தன்று மாலை வேளையில் குடும்பத்தோடு ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

இதையும் படிக்கலாமே
விநாயகர் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thali kayiru matrum murai Tamil. How to change thali kayiru. How to change thali rope. Thali pirichu korkum murai.