நாளை தமிழ் வருட பிறப்பு பிறக்கவிருக்கிறது. எப்படி வீட்டிலேயே எளிமையாக கொண்டாடுவது?

tamil-new-year-images2

நாளை சித்திரை மாதம் 1 ஆம் நாள் பிறக்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திங்கள் மிக சிறப்பாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேஷ ராசியில் சூரியன் வந்து சித்திரை மாதம் துவங்குவதால் தமிழர்களுக்கு சித்திரையே தமிழ் வருடப் பிறப்பாக இருக்கிறது. தொன்று தொட்டு சித்திரை திருநாளை கொண்டாடி வருகிற வேளையில் இவ்வாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே நம்மால் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே எளிமையாக சார்வரி வருடத்தை எப்படி வரவேற்பது என்பதை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

tamil-new-year-images

இவ்வாண்டு 34வது வருடமாக சார்வரி வருடம் அமைந்திருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதியாகிய இன்று இரவு 7.20 சஷ்டி திதியில் கிருஷ்ணபட்சத்தில், மூல நட்சத்திரத்தில் துவங்குகிறது. அதிகாலையில் எழுந்து இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வது சிலருக்கு கடினமாக இருக்கும். அவர்கள் இன்று அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வைத்துவிடுவது சுலபமாக இருக்கும்.

சித்திரை திருநாளுக்கு மிக முக்கிய அம்சமாக விளங்குவது முகம் பார்க்கும் புத்தம் புதிய கண்ணாடி. புதிதாக கண்ணாடி வாங்க முடியாத நிலையில் பழைய கண்ணாடியை உபயோகிக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். கண்ணாடிக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, சிறிது பூ சாற்றி வைக்கவும். கண்ணாடியின் முன்பு ஒரு தாம்பூல தட்டை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் உங்களிடம் இருக்கும் பழங்களை அழகாக அடுக்கி வைக்கவும். பழவகைகளில் முக்கனிகள் இருப்பது சிறப்பானது. வாழை சீப்பை முதலில் வைத்துக் கொள்ளுங்கள். திராட்சை, மாதுளை, ஆப்பிள், மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்களை தாம்பூலத்தில் வைக்கலாம். பின்னர் பழங்களின் மீது பூவை வைக்கவும். சிறு சிறு கிண்ணங்கள் எடுத்துக் கொண்டு அதில் அரிசி, பருப்பு, நவதானியங்கள், வெல்லம், கல்லுப்பு இவற்றை தனித்தனியாக வைக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் கல்உப்பை வைக்கிறோம். நவதானியங்களில் உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒன்றை வைத்தாலே போதும். இவற்றை வைக்கும் போது தலை தட்டி வைக்கக்கூடாது. கோபுரம் போல் குவித்து வைக்க வேண்டும்.

tamil-new-year-images1

பின்னர் செம்பு அல்லது கலசத்தில் நிரம்ப தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். தண்ணீரில் உதிரிப் பூக்களை போடலாம். அதன்பின் ஒரு தாம்பூல தட்டில் சில்லறை காசுகளையும், நோட்டுகளையும் வைக்கவும். சிறிது பூ வைக்கவும். உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை இதில் போடலாம். பின்னர் சிறு தட்டில் வெற்றிலை, கொட்டை பாக்கு, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் வைக்கவும். அவ்வளவுதான். இதில் சில பொருட்கள் இல்லையென்றாலும் கவலை வேண்டாம். உங்களிடன் இருக்கும் பொருட்களே போதுமானது.

- Advertisement -

இவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டால் காலையில் நிவேதனப் பொருள் தயார் செய்து பூஜையை ஆரம்பிக்கலாம். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் அல்லது பாசி பருப்பு பாயாசம் தயாரிக்கலாம். தமிழ் வருட பிறப்பை குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் வரவேற்பது நல்லது. அவர் காலையில் எழுந்து முதலில் குளித்து முடித்து அந்த கண்ணாடியில் அனைத்து பொருட்களையும் பார்க்க வேண்டும். பின்னர் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் எழுப்பிவிட்டு பூஜை அறைக்கு அழைத்து வர வேண்டும். அவர்கள் அனைவரும் கண்ணாடியின் மூலமாகத்தான் அலங்காரம் செய்து வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின்னர் அனைவரும் தயாராகி, நிவேதனம் வைத்து, தூப தீபம் காண்பித்து விளக்கேற்றி வழிபாடுகள் செய்யலாம். வாசலில் கோலத்தின் மேல் கிழக்கு முகமாக ஒரு தீபம் ஏற்றுவது நல்லது. இறுதியாக காக்கைக்கு சிறிது பொங்கல் வைத்து மற்றவர்கள் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு பூஜையை நிறைவு செய்யலாம்.

chithirai-thirunal-poojai

வரவிருக்கும் புதிய சார்வரி வருடம் முழுவதும் நன்றாக அமைய வேண்டும் என்பதனை உங்கள் குலதெய்வத்திடம் முதலில் பிரார்த்தனையாக முன் வையுங்கள். உங்களது குடும்ப உறுப்பினர்களும், உலக மக்களும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும் குறைவின்றி இந்த ஆண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுங்கள். நவதானியங்கள் வைப்பதும், அரிசி, பருப்பு போன்றவற்றை வைப்பதும் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான். தானியங்களுக்கும், உணவிற்கும் பஞ்சம் ஏற்படக்கூடாது என்பது தான் அடிப்படை தத்துவம். உலக மக்களின் நலன் கருதி இவ்வாண்டு தமிழ் வருட பிறப்பை சிறப்பாக வரவேற்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன ‘பாகவத புராணம்’.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tamil new year pooja at Home. Tamil puthandu valipadu. Tamil puthandu valipadu murai. Tamil new year valipadu. Tamil varusha pirappu pooja.