பொதுவாகவே முள்ளங்கி, பீட்ரூட், நூக்கல் போன்ற காய்கறிகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஏனெனில் இவற்றை பொரியல் செய்தாலும் அல்லது குழம்பு வைத்தாலும் இதில் இருக்கும் பச்சை வாசனை அப்படியே தெரியும். எனவே இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைகள் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவர்களை கட்டாயப்படுத்தி இந்த காய்கறி உணவுகளை சாப்பிட வைக்க முடியாது. எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் இவற்றை சுவையான உணவுகளாக சமைத்து கொடுத்தால் தானாகவே உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ருசியான பீட்ரூட் பிரியாணியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – அரை கிலோ, அரிசி – 2 டம்ளர், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, தேங்காய் – அரைமூடி, உப்பு – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி, காய் துருவல் பயன்படுத்தி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து வைக்க வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். அதன்பின் அரை மூடி தேங்காயைத் துருவி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
பிறகு தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து, வடிகட்டி ஒரு கப் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மறுபடியும் அரிசியுடன் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து விட்டு. வேகவைக்க வேண்டும். அதன்பின் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து நன்றாகக் கொதித்ததும், இவற்றுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து மூடி போட்டு, 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான பீட்ரூட் பிரியாணி தயாராகிவிடும்.