5 துண்டு ப்ரெட் இருந்தா 5 நிமிஷத்துல சுவையான பிரட் பக்கோடா இப்படிக் கூட செய்யலாமே! செம்ம டேஸ்டியா இருக்கும்.

bread-pakkoda0
- Advertisement -

பொதுவாக பக்கோடா என்றால் வெங்காயத்தை உதிர்த்துப் போட்டு கடலை மாவுடன் சேர்த்து செய்வது தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் பிரெட்டை உதிர்த்து அதனுடன் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் இந்த பிரட் பக்கோடா அட்டகாசமான சுவையில் இருக்கப் போகிறது. நீங்கள் இதுவரை சுவைத்திடாத இந்த பிரட் பக்கோடா செய்வதும் சுலபம் தான். ஐந்தே நிமிடத்தில் மாலை நேரத்தில் டீயுடன் செய்து கொடுத்தால் வீட்டிலிருக்கும் அனைவருடைய பாராட்டுகளும் உங்களுக்கு தான். இந்த டேஸ்டியான பிரட் பக்கோடா எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

bread

பிரெட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
பிரெட் – 5 துண்டு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, காய்கறி – கால் கப்.

- Advertisement -

பிரெட் பக்கோடா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு 4 பச்சை மிளகாய்களை கீறி சேருங்கள். இப்போது மிக்ஸி ஜாரை இயக்கி நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு மிக்ஸிங் பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

bread-pakkoda

ஒரு பெரிய வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை இந்த கலவையுடன் நன்கு உதிர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பக்கோடா செய்ய தேவையான அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, 2 சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களிடம் கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், குடை மிளகாய் போன்ற ஏதாவது காய்கறிகள் இருந்தால் அதனை அரை கப் அளவிற்கு குட்டி குட்டியாக நறுகிகி சேர்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் ஆப்ஷனல் தான். காய்கறிகள் இல்லை என்றால் விட்டு விடலாம். காய்கறிகள் சேர்க்கும் பொழுது கூடுதல் சுவையாக இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா எண்ணெய் குடிக்காது. சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும். சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -