கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய் இவ்வாறு காய் வகைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு இவற்றில் சிலவற்றை மட்டும் தான் சாப்பிட பிடிக்கும். அதிலும் ஒரு சில குழந்தைகள் காய்கறி பொரியல் என்று சொன்னாலே தொட கூட மாட்டார்கள். இவ்வாறு பெரும்பாலானோர் ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றது. இதனை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மையை அளிக்கிறது. இந்த கத்தரிக்காயை குழந்தைகளும் சாப்பிடும் வகையில் எவ்வாறு சுவையாக சமைத்து கொடுக்கலாம். என்பதைப் பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கத்தரிக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, முட்டை – 2, மைதா மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் கத்தரிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிய கின்னத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதன் பின் அறிந்து வைத்துள்ள கத்தரிக்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் நன்றாக அடித்து வைத்துள்ள முட்டை, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு ஒரு கப் மைதா மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நன்றாக சலித்து கத்தரிக்காய் கலவையுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியாக உப்பையும் சேர்த்து அனைத்தையும் ஒரு முறை நன்றாக பிரட்டி வைத்து பத்து நிமிடங்கள் அதனை அப்படியே வைத்துவிட வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மசாலாக்கள் சேர்த்து பிரட்டி வைத்துள்ள கத்தரிக்காயை கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் கத்தரிக்காய் நன்றாக சிவந்து பொரிந்து வரும். அதனை ஜார்னி கரண்டியை பயன்படுத்தி எண்ணெயை வடித்து எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு மீதம் உள்ள கத்தரிக்காய்கள் அனைத்தையும் எண்ணையில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

பொறித்த கத்தரிக்காய் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட கொடுத்துப்பாருங்கள். வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் ஆச்சரியமிக்க வகையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் சாப்பிட்டு மகிழ்வார்கள். இவ்வாறு விருப்பமாக சாப்பிடுவதோடு நிறுத்தாமல் மீண்டும் இதனை எப்போது சமைத்து கொடுப்பீர்கள் என்று உங்களைத் தொல்லை செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள்.