இட்லி, தோசை எல்லாம் வேணாமா? 4 துண்டு பிரெட், 1 கேரட் இருந்தா போதும் சட்டுனு இப்படி ஒரு பிரட் சாண்ட்விச் செஞ்சி சாப்பிடலாமே!

bread-sandwich1
- Advertisement -

எப்ப பாத்தாலும் இட்லி, தோசை என்று பழைய உணவு வகைகளை சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கு சாண்ட்விச், பர்கர் எல்லாம் பெரிய விஷயம் போல் தோன்றுகிறது. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு நடுவ் கொஞ்சம் மசாலாவை அமுக்கி வைத்து டோஸ்ட் செஞ்சு கொடுத்தா நொடியில ரெடியாயிடும் சாண்ட்விச்! காலை உணவை இனிதாக்க இந்த ஆரோக்கியம் மிகுந்த கேரட் சாண்ட்விச்சை நீங்களும் ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள்! இந்த கேரட் பிரட் சாண்ட்விச் எப்படி செய்வது? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

bread

பிரட் சாண்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 6, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, கேரட் – ஒன்று, பெரிய பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நெய் – தேவைக்கு ஏற்ப, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

பிரட் சாண்ட்விச் செய்முறை விளக்கம்:
நபர் ஒன்றுக்கு 3 சான்விச்கள் வர 6 பிரட் துண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவின்படி உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்குங்கள்.

bread-sandwich

பின்னர் இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதங்கி கண்ணாடி பதம் வந்தவுடன், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் மசிய வதங்குவதற்கு கொஞ்சம் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும், துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து வேக வதக்க வேண்டும்.

- Advertisement -

அதனுடன் கரம் மசாலாத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசம் போக லேசாக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மசாலா ஒன்றுடன் ஒன்று கலந்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். இறுதியாக நறுக்கிய மல்லித்தழை தூவி ஒருமுறை கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க இப்பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். கொஞ்சம் ஆறியதும் ஒரு பிரட் துண்டை எடுத்து அதன் மீது இந்த மசாலாவை நன்கு பரப்பி விடுங்கள்.

bread-sandwich0

பின்னர் இன்னொரு பிரெட் துண்டால் மூடி மேலே நெய்யைத் தேவையான அளவிற்கு தடவி தோசைக்கல்லில் நெய் விட்டு பிரெட்டின் இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுங்கள். வேக வைக்கும் பொழுது தோசைக் கரண்டியால் நன்கு அழுத்திக் கொடுங்கள், இரண்டு பிரட் துண்டும் ஒன்றோடு ஒன்று நன்கு ஒட்டிக் கொள்ளும். நீங்கள் பரிமாறும் பொழுது முக்கோணம் போல இரண்டாக வெட்டி தட்டில் வைத்துக் கொடுங்கள். அஞ்சு நிமிஷத்துல சட்டுனு செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சுடச்சுட சாப்பிட்டால் பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடிக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -