சௌசௌ கூட்டை விட இப்படி பொரியல் ஒரு முறை செய்து பாருங்கள், வீட்டில் எல்லோரும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

sow-chow-chow-poriyal
- Advertisement -

சௌசௌ ரொம்பவே ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒரு காய்கறி வகை ஆகும். நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ காய்கறி அடிக்கடி சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியம் வழுபெற உதவும். நீர்சத்துள்ள காய்கறிகள் பொதுவாக கூட்டு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்படி பொரியல் போல செய்து பாருங்கள், ரொம்பவே அசத்தலான சுவை கொடுக்கும். வத்த குழம்பு, கார குழம்புக்கு எல்லாம் தொட்டுக் கொள்ள இதை விட ஒரு பெஸ்ட் காம்பினேஷன் இருக்க முடியாது எனவே சௌசௌ பொரியல் எளிதாக எப்படி செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சௌசௌ பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
சௌசௌ காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பூண்டு பற்கள் – 2, வர மிளகாய் – ஒன்று, உப்பு – தேவைக்கு ஏற்ப, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

சௌசௌ பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு சௌசௌ காய்களை மேலிருக்கும் தோலை சீவி, உள்ளிருக்கும் விதைகளை எடுத்து, பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் ரொம்பவே சீக்கிரம் வெந்துவிடும். இதற்கு தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. எனவே அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவற்றை வறுத்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 பூண்டுப் பற்களை இடித்து சேருங்கள்.

- Advertisement -

இவற்றை லேசாக வதக்கிய பின்பு நீங்கள் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள சௌசௌ காய்களை சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 2 நிமிடம் வதக்கிய பின்பு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் வாணலியை மூடி வைத்து கொள்ளுங்கள். இரண்டு நிமிடத்தில் சௌசௌ நன்கு வெந்துவிடும். மூடி வைத்து சமைப்பதால் நீர் உள்ளே தானாகவே விடும்.

5 நிமிடம் நன்கு வேக வைத்த பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து அந்த விழுதினை சௌசௌ காயுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி எடுத்தால் சுவையான அற்புதமான சவ்சவ் பொரியல் தயார்! இதே முறையில், இதை அளவுகளில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள். இது எல்லா வகையான சாதத்துடனும் தொட்டுக் கொள்ள விருப்பமானதாக இருக்கும்.

- Advertisement -