கொஞ்சம் கூட நெய் சேர்க்காமல் 10 நிமிடத்தில் சுவையான பேக்கரி லட்டு வீட்டிலேயே எப்படி செய்வது?

laddu
- Advertisement -

லட்டு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? இனிப்பு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை என்றால் அது லட்டு தான். லட்டு வகைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடைகளில் விதவிதமான லட்டுகள் தயாரித்தாலும், நம் கைப்பட நாமே செய்தால் எப்படி இருக்கும்? திடீரென யாராவது விருந்தாளிகள் வந்து விட்டாலோ அல்லது குடும்பத்தில் விசேஷமான நாட்கள் வரும் பொழுதோ சட்டென இதனை செய்து கொடுத்தால் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். கொஞ்சம் கூட நெய் சேர்க்காமல், சாதாரண எண்ணெயிலேயே சூப்பர் சுவையுள்ள பேக்கரி ஸ்டைல் லட்டு எப்படி செய்வது? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

laddu_1

லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – 2 கப், கடலை மாவு – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை அளவு, கேசரி பவுடர் – 2 சிட்டிகை அளவு, சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

லட்டு செய்முறை விளக்கம்:
முதலில் லட்டு செய்ய தேவையான சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த முறையில் செய்தால் சமையல் செய்யத் தெரியாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து விடலாம். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். எந்த கப்பில் சர்க்கரை அளந்து எடுக்கிறார்களோ, அதே கப்பில் தண்ணீரும் அளந்து ஊற்ற வேண்டும். சர்க்கரை பாகு கொதித்ததும் லேசாக தொட்டு பாருங்கள். கைகளில் பிசுபிசுவென ஒட்டும் அளவிற்கு கொதித்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

sakkarai pagu

ஏலக்காய்தூள் இல்லாதவர்கள் மூன்று ஏலக்காய்களை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான். ஒரு சிறிய பௌலில் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். கடலை மாவு நீர்க்க கரைக்க அதே கப் அளவிற்கு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். லட்டு நிறமுடன் இருக்க விரும்பினால் கேசரி பவுடர் 2 சிட்டிகை அளவிற்கு தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் கரைத்த இந்த கடலை மாவு பூந்திகளாக செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதிக்க விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பெரிய வடிகட்டியில் இந்த மாவுக் கரைசலை ஊற்றி லேசாகத் தட்டினால் போதும் முத்துப் போல கடலை மாவு எண்ணெய்க்குள் விழுந்து பூந்திகளாக மாறும். ரொம்ப நேரம் எண்ணெய்க்குள் இருந்தால் காராபூந்தி செய்வது போல மொறுமொறுவென்று ஆகிவிடும்.

boonthi

எனவே எண்ணெயில் பொரித்ததும் சட்டென ஒரு கரண்டியால் எடுத்து எண்ணெயை வடிகட்டி தட்டில் கொட்டி கொள்ள வேண்டும். தட்டின் மீது முதலிலேயே டிஷ்யூ பேப்பரை விரித்து கொள்ளுங்கள். அப்போது தான் அதிகப்படியான எண்ணெயை உறிந்து கொள்ளும். இதே போல எல்லா மாவையும் பூந்திகளாக செய்து எடுத்த பின்பு அவற்றை ஆற வைத்த சர்க்கரை பாகில் போட்டு அடுப்பை பற்ற வைக்க வேண்டும். மிதமான சூட்டிலேயே சர்க்கரைப் பாகுடன் பூந்திகளை சேர்த்து நன்கு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்றாக கலந்து கொஞ்சம் கெட்டியாக ஆனதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

laddu 1

இதனை நன்கு ஆற விடவும் கூடாது, அதிக சூட்டிலும் லட்டு பிடிக்க கூடாது. கை பொறுக்கும் சூடு இருக்கும்படி கொஞ்ச நேரம் ஆற விட்டு விடுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடித்தால் அழகாக நன்கு பிடித்துக் கொள்ளும். அப்புறம் என்னங்க! சுவையான பேக்கரி லட்டு பத்தே நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் தயாராகிவிட்டது. அலங்காரத்திற்கு மேலே பாதாமை துருவி சேர்த்தால் போதும். வீட்ல செய்தது என்று சொன்னால் யாரும் நம்பகூட மாட்டார்கள். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -