சப்பு கொட்டும் சுவையில் மிளகு சட்னி! 10 நிமிடத்தில் இப்படி அரைத்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட கொடுத்து பாருங்க, அடிக்கடி கேப்பாங்க!

pepper-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் இந்த மிளகு சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கப் போகிறது. இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த மிளகு சட்னி வெங்காயம் சேர்க்காமல் தக்காளியை மட்டும் வைத்து பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். ஆரோக்கியத்திற்கு நன்மைகளை செய்யக்கூடிய இந்த மிளகு சட்னி அதீதமான ருசியில் இருக்கும். இதை எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Milagu benefits in Tamil

மிளகு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
மிளகு – 2 ஸ்பூன், வர மிளகாய் – 5, வெந்தயம் – கால் ஸ்பூன், தக்காளி – 5, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, கருவேப்பிலை ஒரு கொத்து.

- Advertisement -

மிளகு சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 5 பழுத்த தக்காளிகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். 2 ஸ்பூன் நிறைய மிளகு எடுத்துக் கொள்ளுங்கள், மிளகை காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும். பின்னர் ஐந்து வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து கருக விடாமலே உப்பி வரும் அளவிற்கு லேசாக வறுக்க வேண்டும். கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

chutney0

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இதனை சேர்த்து ஆற விடுங்கள். பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்க கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு மிக்ஸி ஜாரில் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியை இயக்கி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சமாக பெருங்காயத் தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளிக்க வேண்டும்.

chutney01

தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி வைத்தால் போதும் சுட சுட இட்லி, தோசையுடன் இந்த சட்னியை பரிமாற அனைவரும் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியான இந்த மிளகு சட்னி ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை செய்யக்கூடியது ஆகும். சளி, இருமல் போன்ற தொந்தரவு இருக்கும் இந்த சட்னியை வைத்து கொடுத்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். வெங்காயம் இல்லாமல் வெறும் தக்காளியை மட்டும் வைத்து செய்யப்படும் இந்த ருசியான சட்னியை நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து, வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

- Advertisement -