புலாவ் பிரியர்கள் இந்த மாதிரி பன்னீர் போட்டு புலாவ் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க! சுவையான பன்னீர் புலாவ் 10 நிமிடம் கூட ஆகாது செய்வதற்கு தெரியுமா?

paneer-pulao-recipe1
- Advertisement -

விதவிதமான புலாவ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த புலாவ் பிரியர்களுக்கு சுவையான இந்த பன்னீர் புலாவ் ரொம்பவே பிடித்து போய்விடும். சூப்பரான டேஸ்டியான ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான பன்னீர் புலாவ் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

பன்னீர் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் – கால் கிலோ, பன்னீர் – 200 கிராம், வெறும் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நெய் – 3 டேபிள்ஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – இரண்டு, ஏலக்காய் – 4, அண்ணாச்சி பூ – ஒன்று, பிரிஞ்சி இலை – 2, சீரகம் – கால் ஸ்பூன், முந்திரி பருப்பு – ஆறு, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், கேரட், பீன்ஸ், பட்டாணி துண்டுகள் – ஒரு கப், கரம் மசாலா – அரை ஸ்பூன், புதினா இலை – ஒரு கைப்பிடி, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, தண்ணீர் – ஒன்றரை கப்.

- Advertisement -

பன்னீர் புலாவ் செய்முறை விளக்கம்:
பன்னீர் புலாவ் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை கால் கிலோ அளவிற்கு எடுத்து சுத்தம் செய்து கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவிற்கு பன்னீரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சதுர சதுரமாக வெட்டி அதில் ஒரு ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி ஊற வைத்து விடுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து கழுவி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு நன்கு காய விடுங்கள். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் தேவைக்கு ஏற்ப சிறிதளவு முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பச்சை வாசம் நீங்கி வெங்காயம் நன்கு வதங்கியவுடன் ஒரு கப் அளவிற்கு பொடிப்பொடியாக நறுக்கிய பட்டாணி, கேரட், பீன்ஸ் துண்டுகளை சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

ரெண்டு நிமிடம் வதக்கிய பிறகு கரம் மசாலாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசம் போனதும் ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகள், ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழைகளை சேர்த்து சுருள வதக்க வேண்டும். எல்லாம் நன்கு வதங்கியவுடன் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து மூடி வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

பாதி அளவிற்கு வெந்திருக்கும். இப்போது ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். இதில் நீங்கள் ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து இருபுறமும் நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்தவற்றை குக்கரில் சேர்த்து, மேலோட்டமாக கொஞ்சம் மல்லி தழை மற்றும் புதினா இலைகளை தூவி சாதத்தை கிளறாமல் மீண்டும் குக்கரை மூடி ஒரே விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அருமையான சூப்பரான பன்னீர் புலாவ் ஈசியாக ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!

- Advertisement -