சுவையான புதினா சாதம் இப்படி 10 நிமிடத்தில் செஞ்சு பாருங்க குழந்தைகள் அடிக்கடி வேணும்னு அடம் பிடிப்பாங்க!

puthina-rice
- Advertisement -

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்தமான இந்த புதினா சாதம், செய்வதற்கும் சுலபமாக இருக்கும். சூப்பரான டேஸ்டியாக இருக்கக்கூடிய இந்த புதினா சாதத்தில் பட்டாணி சேர்ப்பது உண்டு. பட்டாணிக்கு பதிலாக நீங்கள் மஸ்ரூம், கேரட், பீன்ஸ், காலிபிளவர், மீல்மேக்கர் போன்றவற்றையும் சேர்க்கலாம். பத்து நிமிடத்தில் நாவூரும் புதினா சாதம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – ஒரு கப், மல்லி இலைகள் – அரை கப், அரிசி – 2 ஆழாக்கு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – ரெண்டு, பச்சை பட்டாணி – அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, அண்ணாச்சி மொக்கு – தலா 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

புதினா சாதம் செய்முறை விளக்கம்:
ஒரு மிக்ஸி ஜாரை முதலில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பிரெஷ்சான புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு கழுவி சேருங்கள். அதேபோல மல்லி இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு மூன்று பச்சை மிளகாய்களை போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைஸ்ஸாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை அலசி ஊற வையுங்கள்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பட்டாணி என்றால் முந்தைய நாள் ஊற வைக்க வேண்டாம். நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்தால் போதும், செய்வதற்குள் ஊறிவிடும். காய்ந்த பட்டாணி என்றால் முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை விருப்பமான வடிவங்களில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வையுங்கள். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி மொக்கு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். ஒரு நிமிடம் வதக்கிய பின்பு மிளகு, சீரகம் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு உதிர்த்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். வெங்காயம் வறுபட ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள பட்டாணியை சேருங்கள். அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேருங்கள். காரம், சுவை அனைத்தையும் கொடுக்கும் இந்த புதினா பேஸ்ட் ரொம்பவே சுவையானதாக இருக்கும். புதினா பேஸ்ட் சேர்த்ததும் பச்சை வாசம் போக நன்கு வதக்கி விட வேண்டும். அதன் பிறகு மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீருடன் நீங்கள் ஊற வைத்துள்ள ரெண்டு ஆழாக்கு அரிசிக்கு, நாலு ஆழாக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். சரியாக தண்ணீர் சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து குக்கரை மூடி விடுங்கள். மூன்று விசலில் மணக்க மணக்க புதினா சாதம் தயாராகிவிடும்! நீங்களும் இதே மாதிரி செஞ்சு அசத்துங்க.

- Advertisement -